தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் பிரதிநிதிகள் தமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தத்தை உருவாக்கினாலே தீர்வு கிடைப்பதற்கான சாத்தியம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மூன்று வருடங்களுக்குள் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில்,“நேற்று யாழிற்கு விஜயம் செய்திருந்த ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி ஒன்றை வழங்கியுள்ளார். மூன்று வருடங்களுக்குள் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பதை முன்வைத்துள்ளார்.
இதன்மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ந்து தமிழ் மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே அவரின் கருத்து அமைகின்றது.
எம்மைப் பொறுத்தவரையில் தீர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ரணில் அரசாங்கத்திடமோ அல்லது மஹிந்தவிடமோ அல்லது இனி வரப்போகின்ற அரசாங்கத்திடமோ இல்லை என்பது தான் உண்மை.
தாமாகச் சிந்தித்து தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் கொஞ்சமேனும் இல்லை.
எனவே தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து அரசாங்கம் தீர்வு தரவேண்டிய ஒர நிர்ப்பந்தத்தை உருவாக்கினாலே அன்றி சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் ஒருபோதும் தமிழர்களுக்குத் தீர்வினைத் தரப்போவதில்லை.
இது வரலாறு நிரூபித்திருக்கின்ற ஒரு பாடமாக இருக்கின்றது.
இவ்வாறு இருக்கின்ற போது, புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி விட்டால் தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றும், அதனை 3 வருடங்களுக்குள் நிறைவேற்ற செயற்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடகவே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.