சஹரான் குழு முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் போன்று தனி நபர் தாக்குதல்கள் (Lone Wolf attack) இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சஹரானின் குழு முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குழுவாக இருந்து எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.
இருப்பினும், அவர்கள் விடுதலைப்புலிகள் போன்றவர்களல்லர். சமயத்தை முன்னிருத்திச் செயற்படுபவர்கள். இதனால், தனிநபர்களாக இருந்து தாக்குதல்களை நடாத்த முடியும். நாம் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான தாக்குதல்களைக் காண்கின்றோம். இதனால், ஆபத்து நிலைமை இன்னும் உள்ளது.
இந்த நிலைமைகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக எமக்குக் கூற முடியாதுள்ளது. நாம் பாதுகாப்பை உறுதிப்படுத்தியே உள்ளோம் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
சஹரானின் வியூகம் குறித்து தேடுவதை பாதுகாப்புப் பிரிவு ஒருபோதும் நிறுத்தி விடக் கூடாது. இந்த வியூக அலைகள் தயவு தாட்சண்யம் இன்றி அழிக்கப்பட வேண்டியவை. அதேபோன்று, ஐ.எஸ்.ஐ.எஸ். கருத்தியல் சிந்தனையால் கவரப்பட்ட ஒருவர் தனியாக செயற்படுவது குறித்து மிகவும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலைமைக்கு மத்தியில் எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு நிலைமைகள் தளர்த்தப்படக் கூடாது. பாதுகாப்பு தளர்த்தப்படும் போது தாக்குதல் வியூகம் வகுப்பது துரிதப்படுத்தப்படுகின்றது.
சஹரான்களுக்கு நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புகள் காணப்படாத போதும், பயங்கரவாதி பக்தாதியின் இஸ்லாமிய அரசு என்ற கொள்கைதான் அவர்களுக்கு உந்துசக்தியை வழங்கியது. எழுத்து மூல உறுதியான தகவல்களின் அடிப்படையில், ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பு 29 நாடுகளில் 143 தாக்குதல்களை நடாத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் பெரும்பாலானவை தனிநபர் தாக்குதல்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் வெளியிடப்பட்ட தபீக் சஞ்சிகையில், அவ்வமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் மொஹமட் அல் அத்னானியில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தனர்.
“நாம் உங்களின் ரோம் நகரை கைப்பற்றுவோம். உங்களின் சிலுவையை உடைத்துப் போடுவோம். உங்களுடைய பெண்களை அடிமைகளாக மாற்றுவோம். அதற்காக அல்லாஹ்வின் அனுமதி கிடைக்கின்றது. உண்மையில் ரோம் தேசத்தை ஆக்கிரமிக்க எமக்கு முடியாது போனாலும் எதிர்வரும் காலத்தில் எமது பிள்ளைகள் அல்லது சந்ததியினர் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பர். அப்போது, உமது பிள்ளைகளை நாம் அடிமைகளாக்கி விற்பனை செய்துவிடுவோம்”.
இது ஐரோப்பாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக இருந்த போதிலும், தீவிரவாதத்தின் விளைவினால் கடுவபிடிய கிராமத்தவர்களுக்கே அதனை முகம்கொடுக்க வேண்டி வந்தது. இதனால், தனியாக வியூகம் வகுப்பவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருப்பது அவசியமாகும். இந்த அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லையெனவும் அந்த வார இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த நாட்டு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சந்தேகிக்கும் சிந்தனையை விதைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நாட்டு முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போகாதவர்கள் என்பதை இராணுவம் பல சந்தர்ப்பங்களிலும் எடுத்துக் கூறியது. குறுகிய காலத்துக்குள் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க இந்த நாட்டு முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு பிரதான காரணமாகியது என்பதை பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.
நாட்டில் வெளிவருகின்ற சில சகோதர மொழி ஊடக எழுத்துக்கள் சில, பெரும்பான்மை மக்களின் உள்ளங்களில் சந்தேகத்தை விதைப்பதனால், இந்த நாட்டில் முஸ்லிம்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படுத்தப்படுகின்றது. அனைத்து முஸ்லிம்களையும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைமை மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது. அத்துடன், கிறிஸ்தவ சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையில் முடிச்சுப் போடும் நடவடிக்கையாகவும் இது காணப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
பயங்கரவாதம் குறித்து பாதுகாப்புப் படைப் பிரிவு தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதும், அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதும் மாற்றுக் கருத்துக்கள் இல்லாத ஒன்றாகும்.