நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:’தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் பணிகளை தொடங்கி இருப்பதாக வருகிற செய்திகள் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.
உலகின் மிக நீண்ட வளம் மிக்க சமவெளிப்பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிற தமிழகத்தின் காவிரிப் படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக் கொண்டிருக்கையில்,
அதனைத் துளியும் பொருட்படுத்தாத மத்திய,மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும், பெட்ரோலிய வேதியியல் மண்டலம் அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, கஜா புயலினால் காவிரிப்படுகையின் வேளாண்மையும், சூழலியமும் மொத்தமாய் பாதிக்கப்பட்டு அந்நிலத்தின் வேளாண்மை பொருளியல் வாழ்வு பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றிருக்கிற சூழ்நிலையில் அதனை மீட்டெடுக்க எதனையும் செய்யாத மத்திய அரசு,அந்நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்திருப்பது ஒட்டுமொத்த காவிரிப் படுகையினை பாலைவனமாக்கும் படுபாதகச் செயலாகும் .
காவிரிப்படுகையில் மொத்தமாக 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.
அவற்றில் 67 இடங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
இதற்கெதிராக காவிரி உரிமை மீட்புக் குழு, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிற நிலையில், ஆளுங்கட்சி தவிர்த்து அனைத்துக்கட்சிகளுமே இத்திட்டத்தைக் கைவிடக்கோரி ஒருமித்துக் குரலெழுப்பி வருகின்றன.
இந்நிலையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டிருப்பது தமிழர்களின் போராட்ட உணர்விற்கு விடப்பட்டிருக்கிற சவாலாகும்.