நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை இன்று திறந்து வைக்கப்படுகிறது.
யுத்தத்தின் பின் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்ட பௌத்த விகாரையாக இது கருதப்படுகிறது. இதன் திறப்பு விழாவும் மிகப் பிரமாண்டமாக நடக்கிறது.
2010ம் ஆண்டு- அப்போதைய மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாவற்குழி புகையிரத நிலையத்தின் அருகில் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர். தமிழர்களிற்கு எதிரான ஏட்டிக்குப்போட்டியான மனநிலையுடன், நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்த்தப்பட்டனர்.
அந்த மக்களிற்கு நிரந்தர குடியிருப்புக்களை அமைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலா ஹெல உறுமய உதவிபுரிந்தது.
பின்னர் விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபை அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகாரை அமைக்க அனுமதியளித்தது.
சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை இன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னோடியாக, விகாரைக்கான புனித தாது, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி பேரணியாக புறப்பட்டது. அநுராதபுரம் தூபராம சைத்திய விகாரைழய நேற்று இரவு பேரணி வந்தடைந்தது.
இன்றைய திறப்புவிழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 1000 விகாரைகள் அமைக்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் அரசை தமிழ் தேசிய கூட்டமைப்பு காப்பாற்றி, 48 மணி நேரத்திற்குள் அரசின் முக்கிய அமைச்சரால் யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.