நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞா்கள்- விசாரணைகளை முடக்க தீவிரமுயற்சி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 31, 2019

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞா்கள்- விசாரணைகளை முடக்க தீவிரமுயற்சி!



யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியில் இராணுவ முகாம் அதிகாாியினால் கைது செய்யப்பட்டு பின்னா் காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞா்கள் தொடா்பான ஆட்கொணா்வு மனு க்களை விசாாிப்பதற்றான கட்டளையை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபா் திணைக்களம் தீவிரமாக முயற்சிப்பதாக தெரிவிக்கபடுகின்றது.

மேற்படி ஆள்கொணர்வு மனுக்களை விசாரிப்பதற்கு யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக்கோரும் சட்ட மா அதிபரின் மேன்முறையீட்டு விசேட அனுமதி மனுவை இடைக்காலக் கட்டளையின்றி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த விடயம் தொடர்பில் ஓகஸ்ட் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான உள்ளிட்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந் நிலையில் அதைத் தடுக்கும் வகையில் சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றில் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் எச்.ரி.பி. டெகிதெனியா, முரூடு எம்.பி. பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு விசேட அனுமதி மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சட்டமா அதிபராக இருந்தபோது இந்த ஆள்கொணர்வு மனுவானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றதால், மனுவை விசாரிப்பதில் இருந்து அவர் விலகிய நிலையில் ஏனைய நீதியரசர்கள் இருவரும் மனுவை விசாரித்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை இடைநிறுத்தி வைக்கும் வகையில் கட்டளையிட வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மூத்த மேலதிக மன்றாடியார் அதிபதி சண்ஜெய் ராஜரட்ணம் உயர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.

எனினும் , மேல் நீதிமன்றின் கட்டளையை இடைநிறுத்தும் கட்டளையை வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்களான பாதிக்கப்பட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டதோடு, மனு மீதான விசாரணை செப்ரெம்பர் முதலாம் திகதிவரை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.