மோடி முன் கூனிக்குறுகிய கூட்டமைப்பின் ரகசியம் வெளியானது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 16, 2019

மோடி முன் கூனிக்குறுகிய கூட்டமைப்பின் ரகசியம் வெளியானது

இரண்டாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரை சந்தித்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் ஏழு தொடக்கம் எட்டு நிமிடங்கள் வரையிலேயே சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அந்த புகைப்படங்களை நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவருமே கூனிக்குறுகிய நிலையில் நுனிக் கதிரையில் அமர்ந்திருந்தனர்


இதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்த விரும்புவது என்ன? தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் கூனிக்குறுகி நின்றமையானது தமிழர்களை ஏனைய இனங்களுக்கு மேலும் அடிமையாகவே வைத்திருக்கும் செயலாகவே காணப்படுகிறது.

தமிழர்களது உரிமையை கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் 30 வருட காலம் சிங்கள இராணுவத்திற்கு எதிராக யுத்தம் செய்திருந்தனர்.

இதன் பின் போர் நிறைவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்காக போராடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

எனினும் தமிழர்களின் உரிமைகளை கேட்டு போராடுவதை விட்டு வருகின்ற அரசாங்கங்களுக்கு வால் பிடித்துக் கொண்டும், அடிமை சேவகம் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த போதிலும் இந்த தமிழ் பிரதிநிதிகளால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை.

இந்த உண்மையை புரிந்து மக்கள் தமது உரிமைக்காக தாமே ஒற்றுமையாக களமிறங்கினால் தான் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே நிதர்சனம்.