வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாழ்ப்பாணத்தில் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கணக்காய்வு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் எமது விவசாய பணிப்பாளர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இதற்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டமையை கண்டிக்கின்றோம், மாகாண விவசாய பணிப்பாளரே நீதி வழங்குங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் குறித்த சம்பவத்திற்கு நீதி கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகஜரொன்றினையும் கையளித்துள்ளனர்