கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் ஜனநாயக போராளிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் ஜனநாயக போராளிகள்!கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதென கொள்கையளவான முடிவிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி வந்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலிற்கு சற்று முன்னரான காலப்பகுதியில் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற பங்காளிகளாக செயற்பட்டு ஜனநாயக போராளிகள் தமது உறவை முடித்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

சுமார் ஒன்றரை வருடங்களிற்கு மேலாக இரண்டு தரப்பும் கூட்டணியாக செயற்பட்டாலும், கூட்டணியின் சம அந்தஸ்துள்ள பங்காளிகளாக ஜனநாயக போராளிகள் நோக்கப்படவில்லை.

அத்துடன் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டங்கள் எதிலும் ஜனநாயக போராளிகள் அழைக்கப்படவில்லை. தமிழ் அரசு கட்சியின் ஒரு சில பிரமுகர்களுடனான உறவாக மட்டுமே அது இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்த முடியாமல், ஜனநாயக போராளிகள் கட்சிக்குள் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தத்தையடுத்து, அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, ஜனநாயக போராளிகள் கட்சி எதிர்காலத்தில் வடக்கு முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணிக்குள் நுழைய வும் கூறப்படுகின்றது.

கடந்த பல மாதங்களாகவே விக்னேஸ்வரனை சந்திக்க ஜனநாயக போராளிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த போதும், அப்போது சந்திப்பை விக்னேஸ்வரன் தட்டிக்கழித்து வந்தார் .

எனினும், கடந்த சில தினங்களின் முன்னர் க.வி.விக்னேஸ்வரன்- ஜனநாயக போராளிகள் சந்திப்பு நடந்தது. இதன்போது, விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக ஜனநாயக போராளிகள் கோடிட்டு காட்டி பேசியுள்ளனர்.

ஜனநாயக போராளிகளின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டை- கொள்கையை- நிரூபிக்க, நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விக்னேஸ்வரன் வலியுத்தியதாகவும் தெரியவருகின்றது.