பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அனுபவமுள்ளவன் நான்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அனுபவமுள்ளவன் நான்!

பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடைய எவராக இருந்தாலும் உயர்ந்த பட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 

அதேநேரம் பயங்கரவாதிகள் எவருடனும் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடக்கைகள் இன்று பகல் இடம்பெற்றது. 

அதன்படி முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளித்தார். இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து சாட்சியமளிக்கும் போது ரிஷாத் பதியுதீன் தெரிவித்ததாவது, 

சதொச வாகனங்களை பயங்கரவாத செயற்பாட்டுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போது, 

சதொச வாகனங்களை தான் பயங்கரவாத செயற்பாட்டுக்கு பயன்படுத்தியதாக ஊடகங்களில் கூறிய எவரும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. 

உண்மையில் நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும். ஆகவே அவர்கள் முறைப்பாடு செய்யவில்லை என்பதால் நான் அவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தேன். 

ஒக்டோபர் ஆட்சி மாற்றத்தின் போது என்னை அந்தப் பக்கம் வருமாறு அடிக்கடி தொல்லை தந்தவர்கள் தான், நான் அவர்களின் பக்கம் செல்லாததன் காரணமாக இவ்வாறு தன் மீது பொய்க் குற்றம் சாட்டுகின்றனர். 

நான் அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னரே சதொச வாகனங்களுக்கு ஜீ.பி.ஸ். பொருத்தும் திட்டத்தை கொண்டு வந்தேன். 

இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த அவர், 

தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட் நபர் ஒருவர் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதியுடன் கதைத்தேன். குறித்த நபரை நாம் கைது செய்யவில்லை என்று இராணுவத்தளபதி கூறவில்லை. மறாறாக தேடிப் பார்த்து கூறுவதாக கூறினார். 

அதனால் தான் மூன்று முறை அவரை தொடர்புகொள்ள வேண்டி ஏற்பட்டது. அவர் கைது செய்யவில்லை என்று கூறியிருந்தால் நான் மீண்டும் அவருக்கு அழைத்திருக்க மாட்டேன். 

மூன்று நாளைக்கு பின்னர் தான் இராணுவத் தளபதி எனக்கு பதில் வழங்கினார். அந்த நபர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார். நான் அந்த நபர் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதிக்கு அழைத்தேன்.​ 

இப்ராஹீம் அல்லது அவர்களின் புதல்வர்கள் தனது அமைச்சில் எவ்வித பதவிகளையும் வகிக்கவில்லை. அவர்கள் வர்த்தகர்கள். தந்தையான இப்ராஹீம் கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் என்ற வகையில் உத்தியோகபூர்வ முறையில் என்னை சந்தித்திருக்கிறார். 

அது சம்பந்தமாக எனது ஊடகப் பிரிவு 2017ம் ஆண்டு காலத்தில் புகைப்படத்துடனேயே பத்திரிகைகளில் செய்தி பிரசுரித்திருந்தது. அந்தப் புகைப்படத்தை வைத்தே என்னை பயங்கரவாதியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். 

இப்ராஹீம் என்ற நபர் ஒருபோதும் என்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து அவரது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குமாறு தனிப்பட்ட ரீதியில் உதவி கோரியதில்லை. 

தனது கட்சி ஒருபோதும் ஸஹ்ரானுடன் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை. அதுதொடர்பில் எமது கடசியின் தவிசாளர் அமீர் அலியிடம் வினவினேன். அவர் தான் எனது கட்சி சார்பாக அந்தப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். 

புகைப்படம் தொடர்பில் பதிலளித்த போது, 

ஸஹ்ரானுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ஒரு தேரர் ஊடகங்களிடம் காட்டினார். அது திஹாரி பிரதேசத்தைச் சேர்ந்த நிஸ்தார் மொளலவி. தன்னை ஸஹ்ரான் என்று கூறுவதாக தெரிவித்து அவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது ஊடகங்கள் தன்னைப் பற்றி கூறுகின்றன என்றும் ரிஷாத் பதியுதீன் கூறினார். 

வில்பத்து வனப் பிரதேசத்துக்கு சொந்தமான 8000 ஏக்கர் நிலம் இருப்பதாக குறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது, 

தனக்கோ தனது குடும்பத்துக்கோ 3000 ஏக்கர் என்றும் அல்லது 7000 ஏக்கர் என்றும் அல்லது 8000 ஏக்கர் நிலம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுக்கிறேன். நான்இது தொடர்பில் தேடிப் பார்த்த போது எனது முழுக் குடும்பத்துக்கும் 54 ஏக்கர் காணியே சொந்தமாக இருக்கின்றது. 

குற்றம் சுமத்தப்படுவது போல் ஏதாவது காணி எனக்கோ எனது குடும்பத்துக்கோ இருக்குமாக இருந்தால் அது தொடர்பில் முழுமையான விசாரணை செய்து அத்தனை காணிகளையும் அரசுடமையாக்குமாறு தான் யோசனை முன் வைக்கிறேன். 

அரபு காலச்சாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய அவர், 

அரபு மத்ரசாக்களின் கல்வி நடவடிக்கைகள் அரபு மொழியில் இடம்பெற வேண்டும். குர்ஆன் அரபு மொழியில் இருப்பதால் அரபு கற்பது தேவையாக இருக்கின்றது. எனினும் வீதிகளில் மற்றும் பதாகைகளில் அரபு மொழியில் இருப்பது தேவையற்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பது போதுமானது. 

பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவன் நானே். அந்த அனுபவம் எனக்கு இருக்கின்றது. அந்த நிலையில் ஒருபோதும் தான் பயங்கரவாதத்துக்கு துணை போக மாட்டேன். அந்த நிலையில் உள்ள என்மீது இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. 

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளித்தார்.