ஈழ எம்ஜிஆர் மனோ:கன்னியாவில் கோட்டை விட்டாரா? - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, June 19, 2019

ஈழ எம்ஜிஆர் மனோ:கன்னியாவில் கோட்டை விட்டாரா?

கொழும்பில் எம்ஜிஆர் பாணி அரசியலில் ஈடுபட்டுள்ள மனோ கணேசன் இடையிடையே வடகிழக்கிற்கும் வருகை தந்து நாடகம் போட தயங்குவதில்லை.

அவ்வகையில் கன்னியா பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பாக அவர் அவிழ்த்துவிட்ட வெடிகள் தற்போது அம்பலமாகிவருகின்றது.

கன்னியா தொடர்பான கலந்துரையாடலில் தீர்வு எட்டப்பட்டதாகவும்,பௌத்த விகாரை அமைக்கமாட்டோம், நீங்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் கன்னியா வளாகத்திற்குள் பிள்ளையார் கோவிலை அமைக்குமாறும் கூறப்பட்டதாக அமைச்சர் மனோகணேசன் அவர்கள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

அவரின் கருத்தை கேட்ட அனைவரும், கன்னியா பிரச்சினை தீர்ந்துவிட்டது, தமிழர்கள் நாம் அவ்விடயத்தில் சாதித்துவிட்டோம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் அது எமக்கான வெற்றியல்ல மோசமானதொரு தோல்வியேயாகும்.

மனோகணேசன் தெரிவித்த “ தொல்பொருள் சின்னங்களுக்கு சிதைவு ஏற்படாதவண்ணம் கன்னியா வளாகத்திற்குள் பிள்ளையார் கோவிலை அமையுங்கள். நாம் பௌத்த விகாரை அமைக்கமாட்டோம்.” என்ற கூற்றின் அர்த்தமும், கலந்துகொண்ட பிக்குகளின் முடிவும் காலகாலம் பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் கோவில் அமைக்க விடமாட்டோம், கன்னியா வளாகத்திற்குள் வேறு ஒரு இடத்தை காட்டுங்கள், அது பொருத்தமான இடம் என்றால் அனுமதிக்கின்றோம். என்றே குறிப்பிட்டார்கள். ஜனாதிபதி, பிரதமர் யாரிடம் சென்றாலும் இதுவே முடிவு என்றும் கூறியிருந்தார்கள்,

அவர்கள் சொன்னது போல வேறொரு இடத்தில் பிள்ளையார் கோவிலை அமைத்தால் அதன் பின்னர் அவர்கள் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரையை அமைப்பார்கள். அப்போது நிறுத்தப்போனால் உங்கள் பிள்ளையார் கோவில் அங்கே உள்ளது இங்கு தலையிட அதிகாரம் இல்லை என்பார்கள். நாம் எமது வரலாற்றையும் தொன்மையையும் இழந்து விடுவோமென உள்ளுர் செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே இந்து-பௌத்த ஐக்கியம் நல்லதே. ஆனால் அதற்கு நிபந்தனைகளாக, ஆளில்லாத ஊரில்" காணி பிடித்து விகாரை கட்டுவதையும், தொல்பொருளாராய்ச்சியில் பௌத்த சிதைவுகளை வடகிழக்கில் தேடும் போது "தமிழ் பௌத்த" வரலாற்றை மறந்து விடுவதையும் நிறுத்த வேண்டும் என இரத்தின தேரரிடம் தான் இன்னும் சில தினங்களில் சொல்வேனென மனோகணேசன் புதிய அஸ்திரத்தை விடுத்துள்ளார். இந்த அடிப்படையில் அவருடன் கலந்துரையாடுவேன். அவர் என் நண்பர்தான். மூன்று வருடங்களாக சபையில் என் பக்கத்து ஆசனத்தில்தான் அவர் இருந்தார் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.