அதகளமாகின்றது அம்பாறை:முஸ்லீம்களும் போராட்டத்தில்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 19, 2019

அதகளமாகின்றது அம்பாறை:முஸ்லீம்களும் போராட்டத்தில்!கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை ஏட்டிக்குபோட்டியாக உண்ணாவிரத போராட்ட களங்களை சந்திக்க தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக தமிழ் மக்களது போராட்டம் தொடர்கின்ற நிலையில் இன்று முஸ்லீம்கள் ஏட்டிக்குப்போட்டியாக கல்முனையில் உண்ணாவிரத போராட்டத்தைதொடங்கியுள்ளனர்.அதிலும் பௌத்த பிக்கு ஒருவர் இரு இனங்களிடையே மோதலை தோற்றுவிக்க போராட்ட களத்தில் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தின் மையப்புள்ளியாக கல்முனை மாறவேண்டியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதுதான் கல்முனை மாநகரசபையாக இருக்கின்றது. இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேசம், ஏற்கனவே தனியொரு பிரதேச செயலகமாக மாற்றப்பட்டு, இன்று சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள் தலைமையில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து முழுமையான நகரசபையாக்கும்படி போராடுகிறார்கள்.

அதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி கடந்த பல்லாண்டுகளாக போராடுகிறார்கள்.


ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகரசபையில் இருந்து முற்றாக பிரிந்து தனி நகர சபை வேண்டும் என போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில், இன அடிப்படையிலான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள், நிலத்தொடர்பற்றும், நிலத்தொடர்புடனும் நடைமுறையில் இருக்கின்றன.

எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவதில் மாத்திரம் என்ன தவறு இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.

அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இன்று தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் இனத்தவர் மத்தியில் கிழக்கில் இந்த பிரச்சினை மெல்ல, மெல்ல பூதாகரமாகி கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்