பனங்காட்டான் எழுதிய ''அவர்களுக்கு நன்றி கலந்த சலாம்! இவர்களுக்கு நன்றி மறந்த வணக்கம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 7, 2019

பனங்காட்டான் எழுதிய ''அவர்களுக்கு நன்றி கலந்த சலாம்! இவர்களுக்கு நன்றி மறந்த வணக்கம்!

போரில் தங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றியுடன் சலாம் போடும் ரணிலும் அவரது அரசும் தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக் கதிரைகளில் ஏற்றியவர்களுக்கு நன்றி மறந்த வணக்கம் கூறுகிறது. அரசியலுக்கும் விபசாரத்துக்கும் இடையிலான கோடு காணாமல் போய்விட்டது.''

அலங்கோல அரசியல் இலங்கையில் தொடர்ந்து அரங்கேறி வருவதைப் பார்க்கையில் சில பெருந்தலைகள் உருளலாம் போலவும், சிலவேளைகளில் அரசாங்கம் ஸ்தம்பிதம் அடையலாம் போலவும் காட்சிகள் தென்படுகின்றன.

அடுத்த மாதம் 9ஆம் திகதி இந்தியப் பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாமென கூறப்பட்டாலும், அதற்கு முன்னர் அங்கு சில அரசியல் பிரளயங்கள் ஏற்படும் வாய்ப்பே அதிகமாகத் தெரிகிறது.

இந்திய உபகண்டத்தில் தேர்தல் முடிவடைந்து இரண்டாம் தடவையாக பெரும்பான்மையுடன் மோடி பிரதமராகியுள்ளார்.

இலங்கையில் இரண்டாம் தடவையாகவும் ஜனாதிபதிப் பதவியில் நாட்டம் கொண்டு சதிராட்டம் புரிந்த மைத்திரிபால சிறிசேன, அது சாத்தியப்படாது என்று தெரிந்த நிலையில் மீண்டும் முன்னைய அணிக்குள் புகுந்து விளையாட எத்தனிக்கிறார்.

இந்தியாவில் இந்துவாதக் கட்சி தலைதூக்கித் தாண்டவம் புரிகிறது. இலங்கையில் பௌத்தவாதம் பித்துப் பிடித்து பேயாட்டம் போடுகிறது.

இரண்டு நாட்டு விவகாரங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்பதே பொருத்தமானது.

மோடியின் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் இருவர் முக்கிய அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளதாக உலக ஊடகங்கள் ஊதி ஊதி வாசிக்கின்றன. ஒருவர் நிர்மலா சீதாராமன் என்ற பெண்மணி. அடுத்தவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் என்ற முன்னாள் ராஜதந்திரி.

இவர்களின் பின்னணியைச் சற்று உட்சென்று பார்த்தால் ஒரு உண்மை தெரியவரும். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிலிருந்து தேர்தலில் நாடாளுமன்ற அல்லது மாநிலங்கள் அவைக்கு தெரிவானவர்கள் அல்ல. இவர்கள் இருவரும் திருமணம் புரிந்தவர்களும் தமிழர்கள் அல்ல.

ஜெய்சங்கர் பிறந்தது டில்லியில். அங்கேயே கல்வி கற்று பட்டங்கள் பெற்று பல பதவிகள் வகித்தவர். தூரகிழக்கு நாட்டைச் சேர்ந்த இவரது மனைவியின் பெயர் குயோக்கா. ஜப்பான், சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இந்தியாவின் தூதுவராகவும், உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றிய ராஜதந்திரி. இவருக்குத் தெரிந்த ஏழு மொழிகளில் தமிழும் ஒன்று.

அமெரிக்கா செல்வதற்கு மோடிக்கு அந்நாடு விதித்திருந்த தடையை ஜெய்சங்கர் அமெரிக்காவில் பணியாற்றியபோது விலத்தியதில் முக்கிய பங்கு வகித்ததன் நன்றிக்கடனாகவே இப்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய இராணுவம் இலங்கையின் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த வேளையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதலாவது செயலாளராக (1988-1990) டிக்சிற்றின் வலது கரமாக இயங்கி, இந்திய இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்தியதில் இந்த ஜெய்சங்கருக்கு பெரும்பங்குண்டு என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு குஜராத் மாநிலங்கள் அவையூடாக இவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப (அமைச்சர் பதவியை காப்பாற்ற) நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடுத்தவர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லையென்பது இப்போது தெரியவந்துள்ளது. ஆந்திரக்காரர் ஒருவரை திருமணம் செய்தபின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர். பெயர் மட்டும் தமிழராக அடையாளம் காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்தில் லக்ஸ்மன் கதிர்காமர் என்பவர் எவ்வாறு தமிழர் என்ற பெயரோடு அமைச்சராக இருந்தாரென்பதை நினைவிற்கொள்வது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானது.

இந்தியாவில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொருவர் இப்போது அமைச்சராகியுள்ளார். இவரது முழுப்பெயர் கர்தீப் சிங் பூரி.

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் கால் பதிக்க முழுமூச்சாக உழைத்த ஒருவர். 1987ஆம் ஆண்டுக்காலத்தில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல்துறை செயலாளராகவிருந்த அதே பூரிதான்.

முதற்தடவையாக நம்பிக்கை தரும் செய்தியுடன் 1987இன் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இவர் கால் பதித்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரி முன்பக்கத் தலைப்புச் செய்திக்கு 'பூரியின் வருகையால் யாழ்ப்பாணம் பூரிப்பு" என எழுதியது ஞாபகமிருக்கிறது.

சில மாதங்களின் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனையும் அவரது குழுவினரையும் ஓரிரவு தனி விமானத்தில் ராஜிவ் காந்தியைச் சந்திக்க புதுடில்லிக்கு கூட்டிச்(?); சென்றவரும் இதே பூரிதான்.

ராஜரீக சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் 2014ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயற்பட்டு இப்போது மோடியால் அமைச்சர் பதவி பெற்றுள்ளார்.

இம்மூவரதும் எதிர்கால செயற்பாடு சில கேள்விக்குறிகளை உலகம் வாழ் தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக ஜெய்சங்கர் - கர்தீப் சிங் பூரி ஆகிய இருவரது அமைச்சரவை வகிபாகம் பற்றி விழிப்பான சந்தேகம் உள்ளது. ஏதோவொரு பாதையால் இந்திய கொள்கையை இலங்கை அரசு ஊடாக தமிழர் தாயகம் மீது மேற்கொள்ள எத்தனிக்கலாம்.

அடுத்து, இலங்கை அரசின் அமைச்சரவையிலிருந்த முழு அமைச்சர்களும், அரை அமைச்சர்களுமாக ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாகக் கைகோர்த்தவாறு பதவி விலகியதை (பதவிகளை தூக்கி எறியவில்லை) பலரும் பலவாறாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு பௌத்த பிக்குவின் உண்ணாவிரதம் வெற்றியளித்துள்ளதெனக் கருதுபவர்கள் நாடு முழுவதும் வெடி கொழுத்தி வரவேற்றுள்ளனர்.

ஒரு பௌத்த பிக்கு சகல முஸ்லிம்களையும் ஒன்றிணையச் செய்து, நாட்டுக்கு பேராபத்தை உண்டாக்கி விட்டாரென வேறு சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சகல முஸ்லிம் அமை;ச்சர்களும் ஒன்றாகப் பதவி விலகியதனூடாக முஸ்லிம்கள் தங்கள் ஒற்றுமையை நிலைநிறுத்தியுள்ளனர் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம். அதேசமயம், தமிழர் தரப்பில் இப்படியான ஒற்றுமை ஏன் வரவில்லையென்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.

றிசாத் பதியுதின் முதன்முதலாக ரவூப் ஹக்கீமின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி ஈட்டியபின், அதிலிருந்து வெளியேறி இலங்கை மக்கள் காங்கிரசை உருவாக்கினார்.

இருப்பினும், இப்போது இவர்கள் இருவரும் உட்பட அனைத்து முஸ்லிம் அமை;சர்களும் ஒரு குடையின்கீழ் இணைந்து கூண்டோடு பதவி விலகியுள்ளனர். எனினும், இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. பின்வரிசை உறுப்பினர்களாகவிருந்து ரணில் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தரப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகினால் ஆட்சி கவிழுமென எதிர்பார்த்திருந்த மகிந்த அணியினருக்கு முஸ்லிம்களின் முடிவு ஜீரணிக்க முடியாதுள்ளது.

இவர்களின் ரணில் ஆட்சி ஆதரவு முடிவு, ஜனாதிபதிக்கும் பலமான ஓர் அடி. இவ்வேளையில் முஸ்லிம்களின் அரசியல் பிரவேசம் பற்றி சுருக்கமாகப் பார்க்க வேண்டும்.

இலங்கையின் டி.எஸ்.சேனநாயக்கவின் முதலாவது அமைச்சரவையிலும், அடுத்த டட்லி சேனநாயக்கவின் அமைச்சரவையிலும் ஒரு முஸ்லிம்கூட அமைச்சராக நியமனமாகவில்லை. பின்னர் வந்த கொத்தலாவலையின் அமைச்சரவையிலும், எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் தலா ஒரு முஸ்லிம் அமைச்சராயினர்.

பண்டாரநாயக்கவின் படுகொலைக்குப் பின்னர் பிரதமரான டபிள்யு. தகநாயக்க இரண்டு முஸ்லிம்களுக்கு தமது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். 1965ல் டட்லியின் இரண்டாவது அமைச்சரவை, 1970ல் சிறிமாவோவின் அமைச்சரவை என்பவற்றிலும் தலா ஒவ்வொரு முஸ்லிமே அமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.

1977ல் ஜே.ஆரின் அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம்களும், பிரேமதாசாவினதும் மற்றும் விஜே துங்கவின் அமைச்சரiவியல் தலா மூன்று முஸ்லிம்கள் அமைச்சர்களாயினர்.

சந்திரிகா குமாரதுங்கவின் பத்தாண்டு கால ஆட்சியில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐந்து முஸ்லிம்களும், அதேபோன்று மகிந்த ராஜபக்சவின் பத்தாண்டு ஆட்சியில் ஆறு முஸ்லிம்கள் அமைச்சர்களாயினர்.

தற்போதைய மைத்திரி - ரணில் கூட்டரசில் ஆறு முழு அமைச்சர்களுடன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பத்து அரை அமைச்சர்களும் பதவி வகித்துள்ளனர். தற்போது பதவியிலிருந்த ஒன்பது பேருமே பதவி விலகினவர்கள்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைவர்கள் முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாவை வெவ்வேறு காரணங்கள் கூறி வரவேற்றுள்ளனர். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வித்தியாசமான கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

போர்க்காலத்தில் இலங்கை அரசுடனும், இராணுவத்துடனும் இணைந்து செயற்பட்ட முஸ்லிம் சமூக அமைச்சர்கள் பதவி விலகியது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் ராணுவம் வென்றதாக அறிவிக்கப்பட்டபோது பாற்கஞ்சி வழங்கி மகிழ்ச்சி கொண்டாடியவர்களுக்கு ரணில் கூறும் நன்றி இது.

கடந்த தேர்தலில் ஆதரவளித்து ஆட்சி பீடம் ஏற்றிய தமிழ் மக்களின் எந்தவொரு கோரிக்கைகளையும் அரசியல் அபிலாசைகளையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், ஜெனிவா தீர்மான கலப்பு விசாரணை, பொறுப்புக் கூறல், புதிய அரசமைப்பு, வழிகாட்டிக் குழு அறிக்கை என்ற எல்லாமே ஆழக்குழிக்குள் புதைக்கப்பட்டு விட்டன.

போரில் தங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு சலாம் போடும் ரணிலும் அவரது அரசும், தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக் கதிரைகளில் ஏற்றியவர்களுக்கு நன்றி மறந்த வணக்கம் கூறுகிறது.

அரசியலுக்கும் விபசாரத்துக்கும் இடையிலான கோடு காணாமல் போய்விட்டது.