முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தனக்கு ஒருபோதும் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகி சாட்சியமளிக்கும் பேதே அவர் இவ்வாறு கூறினார்.
பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தன்னுடன் மிகவும் சிறந்த முறையில் உரையாடியதாகவும், அது ஒரு போதும் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையவில்லை என்றும் அவர் கூறினார்.
பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும், அதுபோன்ற ஒரு உரையாடலே அவருடன் இடம்பெற்றதாகவும் கூறினார்.
இதன்போது கைது செய்யப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய எவரையும் விடுதலை செய்வதற்கு அவர் தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.
அதேபோல் தான் சுயாதீனமாகவே செயற்படுவதாகவும், ஜனாதிபதியோ பிரதமரோ அழுத்தம் கொடுத்ததில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டிலுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் நூற்றுக்கு நூறு வீதம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக கூற முடியாது என்று கூறினார்.
எவ்வாறாயினும் 26ம் திகதி சாய்ந்தமருது சம்பவத்தின் மூலம், நாட்டுக்கு ஏற்பட்டிருந்த பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் பாரிய திருப்புமுனை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாத தாக்குதல் வெடி பொருள் முலமாக மாத்திரமன்றி, கத்தி, வாகனம், நீர் போன்று எந்த வகையிலும் நடத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
அதேநேரம் புலனாய்வுத் துறை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருப்பதால், பலனாய்வுப் பிரிவு வீழ்ச்சி கண்டிருப்பதாக கூற முடியாது என்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்