முஸ்லீம் அமைச்சர்களது பதவி விலகல் தோல்வியா? வெற்றியா? அல்லது அரசியல் சாணக்கியத்தனமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 4, 2019

முஸ்லீம் அமைச்சர்களது பதவி விலகல் தோல்வியா? வெற்றியா? அல்லது அரசியல் சாணக்கியத்தனமா?

நல்லாட்சி அரசாங்க ஆதரவு முஸ்லீம் அமைச்சர்களது பதவி விலகல் சிலரை மகிழ்வித்துள்ள நிலையில் சிலரை குழம்ப வைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆலோசகரான ரத்தன தேரரை உண்ணாவிரதம் இருக்க வைத்த அதேவேளை , சிறையிலிருந்து விடுவிகப்பட்ட ஞானசார தேரரை அனுப்பி கிளர்ந்தெழ வைத்ததோடு தனது அனுதாபிகளை கண்டியில் குவியவும் வைத்தார் ஜனாதிபதி. அந்த நாடகத்தின் அடுத்த கட்டமாக , ஜனாதிபதியே தான் நியமித்த ஆளுனர்களை பதவி இழக்கவும் வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் , ரிசாட்டின் பதவியை ஒருபோதும் பறிக்க மாட்டார் என ஜனாதிபதி போட்ட கணிப்பு மீண்டும் தப்புக் கணக்கானது.



அனைத்து முஸ்லீம் பிரதிநிதிகளையும் அழைத்து பேசிய பிரதமர் , ஒருவரை மட்டும் ஒதுக்கினால் பலவீனமாகிவிடும் எனவே அனைவரையும் பதவி துறக்கச் முடிவு எட்டப்பட்டது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதுவரை சாதுரியமாக இழுத்துக் கொண்டு போவதே அவர்களின் சாணக்கியத்தனம்.

காரணம் பதவியில் இருக்கும் அமைச்சர்களை விசாரிக்க முடியாது. எனவே ஒருவரை விசாரிக்க பதவி இல்லாதிருப்பது நல்லது. தவறுகள் இருந்தால் விசாரிக்கலாம். அதற்கான சாட்சிகள் தேவை. இன்றும் முப்படை அதிகாரமும் , சட்டம் - ஒழுங்கு அமைச்சும் ஜனாதிபதியிடமே உள்ளது. வேறு யாரும் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

ரிசாட்டை மட்டும் பதவி துறக்க வைத்தால், பின்னர் மற்றவர்கள் பெயர்களையும் இழுத்து மீண்டும் மீண்டும் தொடர் சங்கிலியாக பிரச்சனை கொடுப்பார்கள். எனவே தான் அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மிடம் இருந்த பதவிகளை துறப்பது என முடிவு செய்தார்கள்.



எனினும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறி போகாது என்பதோடு முன்போல அவர்கள் ரணில் அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவு கொடுப்பார்கள் என்பதையும் அவர்களே பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள்.

இதனால் ரணில் அரசுக்கு உள்ள அழுத்தங்கள் மட்டுமல்லாது முஸ்லீம்கள் மேலுள்ள இனவாத பிரச்சனையும் அடிபட்டு போகும். இதை கருத்தில் கொண்டே முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகினார்கள்.

ஆளுனர்களது பதவி விலகல் , ஜனாதிபதி சம்பந்தப்பட்டது. அவரின் ஆட்களை பதவி விலகாமல், ரணிலின் ஆதரவு ரிசாட்டை பதவி விலகச் சொல்ல முடியாது. " ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலியை பதவி விலகச் சொல்லியுள்ளேன். ரிசாட்டையும் பதவி விலகச் சொல்லுங்கள்" என ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.



இந்நிலையில் பிரதமர் ரணில் , ரிசாட்டை விலகச் சொல்ல மாட்டார் என மைத்ரி உருதியாக நினைத்துள்ளார். காரணம் ரணில் , ரிசாட் பதவி விலக தேவையில்லை. அவர் மேல் ஏதாவது குற்றம் இருந்தால் உறுதிப்படுத்துங்கள் என்று முன்னரே ரணில் தெரிவித்திருந்த நிலையில் ரிசாட்டும் , தான் பதவி விலகப் போவதில்லை என கூறியிருந்தார்.

இதை வைத்து இனவாத அரசியல் செய்ய நினைத்த ஜனாதிபதிக்கு , ஒரு அடி விழுந்துள்ளது. அதுதான் அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளை தூக்கி எறிந்தார்கள்.

ரிசாட் , பதவி துறந்து அனைவரும் வெளியேற , ரணில் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என கனவு கண்டவர்கள், திடீரென நடந்த திருப்பத்தை நினைத்து திகைத்து போயுள்ளனர்.



இந்த இழுபறி இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என பலர் நினைத்தாலும் அது வேறு கோணத்தில் திசை மாறிவிட்டது.

அதாவது சஹரானின் குண்டு வெடிப்பின் பின் மகிந்த - கோட்டா தரப்பை நோக்கி உருவான இனவாத அலை , இப்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை பலமாக்கும் இனவாத அலையாக வளர்ந்து வந்த போதும் தற்பொழுது அதுவும் பிசு பிசுத்து விட்டது.

இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மைத்ரியை ஜனாதிபதி அபேட்சகராகவும் , மகிந்தவை பிரதமர் அபேட்சகராகவும் போட்டியிட வைக்க சிலர் காய்களை நகர்த்துகிறார்கள்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை அபேட்சராக்குவது என அனைத்து கட்சிகளுக்குள்ளும் ஒரு குழறுபடி உள்ளது. யாரும் யார் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என பகிரங்கமாக அறிவிக்காமல் எல்லோரும் பிடி வைத்தே பேசுகிறார்கள்.

மகிந்த - பசில் கூட முஸ்லீம் அமைச்சர்களை எதிர்க்க மாட்டார்கள். அடுத்த முறை அவர்களது ஆதரவு மகிந்த தரப்புக்கு தேவைப்படலாம்.

இந்நிலையில் அனைத்து முஸ்லீம் அமைச்சர்களது பதவி துறத்தல் என்பது இனவாதத்தை ஊதிப் பெருப்பிப்பதற்கு பெரும் தடையாகி விட்டமைதான் உண்மை.

இனி எதை வைத்து அரசியல் செய்வது?