இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர கால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இருந்தமை தெரியவந்தது.
அத்துடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் ரத்து செய்யப்பட்டிருந்த அவசரகால சட்டம், இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் உடன் அமுல்படுத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, குறித்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் 77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத பின்னணியில் தற்போது முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக இன்று காலை முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள் வருகைத் தந்திருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்களே இவ்வாறு வருகைத் தந்திருந்தனர்.
சிறார்கள், பெண்கள் என பலர், கடும் வெயிலுக்கு மத்தியில் கைதுசெய்யப்பட்டுள்ள தமது உறவுகளை பார்வையிடுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தனர்.
இதையடுத்து, ஒவ்வொரு உறவினர்களாக உள்ளே அனுமதித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
தமது உறவை தேடி வருகைத் தந்த கம்பளை பகுதியைச் சேர்ந்த வசிர் அஹமத், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
தனது சகோதரர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றமற்றவர் என 12 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் தெரிவித்த போதிலும், இன்று வரை அவர் விடுவிக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சுமத்தினார்.
தனது சகோதரர் மாத்திரமன்றி, பல அப்பாவி முஸ்லிம்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் நிலைக்கொண்ட பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முன்னர், அரசியல் சதிகளை முதலில் ஒழிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலுள்ள அனைத்து இனங்களும், இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழ்வதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும், அவ்வாறான நிலைப்பாட்டிலுள்ள தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்தை காண்பித்து, தமிழர்களை தாக்கியவர்கள், இன்று பயங்கரவாதிகள் என்ற பெயரில் முஸ்லிம்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
30 வருட யுத்தத்தை எதிர்நோக்கிய தமக்கு, இனியும் யுத்தமொன்றை எதிர்கொள்ளும் சக்தி தமிழ் பேசும் சமூகத்திடம் கிடையாது என வசிர் அஹமத் கூறினார்.
எந்தவித குற்றமும் இழைக்காத நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த அப்பாவி முஸ்லிம் மக்களை விடுவிக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசிர் அஹமத் கேட்டுக்கொண்டுள்ளார்.