ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த தேசிய தவ்ஹித் ஜமாத் தீவிரவாதிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, June 15, 2019

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த தேசிய தவ்ஹித் ஜமாத் தீவிரவாதிகள்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புலனாய்வு அதிகாரி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் மாத்திரமே, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரிகளின் காணொளி ஐ.எஸ் அமைப்புக்கு, இந்தோனேசியா வழியாகவே அனுப்பப்பட்டுள்ளதென்றும் அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி இலங்கை தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தார். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குழு, அல்- பக்தாதியின் தலைமையில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாமேயன்றி, தாக்குதல் நடத்தியவர்கள் தூய ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்களல்ல என்றும் அந்தப் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தேசிய தௌஹித் ஜமாத் என்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்பே மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் தலைவராக இருந்த சஹரான் ஹாசிமும் தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவராக செயற்பட்டு உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.