நான்காவது நாளாகவும் தொடர்கிறது மதத் தலைவர்களின் போராட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 19, 2019

நான்காவது நாளாகவும் தொடர்கிறது மதத் தலைவர்களின் போராட்டம்

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அதற்கமைய தேரர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் இன்றும் (வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய நேற்று போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

குறித்த 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்வில் கல்முனையில் உள்ள இளைஞர்கள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கட்கிழமை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.