தாலி கட்டிய கணவனுடன் செல்வதாக கூறிய இளம் பெண்... அதன் பின் உறவினர்கள் செய்த அதிர்ச்சி செயல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 15, 2019

தாலி கட்டிய கணவனுடன் செல்வதாக கூறிய இளம் பெண்... அதன் பின் உறவினர்கள் செய்த அதிர்ச்சி செயல்

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணை உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோகைமலை அருகே உள்ள கருங்கல்பட்டியை சேர்ந்தவர் மணிவாசன் (22). கடவூர் பாலவிடுதி அருகே உள்ள செம்பியநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா (20).

இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலைபார்த்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ரம்யாவுக்கும் அவரது உறவினரின் மகனுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து ரம்யா தனது காதலன் மணிவாசனிடம் தெரிவித்து உள்ளார்.

இதனால் மணிவாசனும், ரம்யாவும் வீட்டை விட்டு வெளியேறி தோகைமலை அருகே மங்காம்பட்டியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்ட சில மணி நேரங்களில் ரம்யாவும், மணிவாசனும் தோகைமலை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அப்போது தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரிஸ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், பெற்றோருடன் செல்ல ரம்யா மறுத்தார். தனக்கு தாலிகட்டிய கணவன் மணிவாசனுடன் செல்வதாக தெரிவித்தார்.

இதனால் மணிவாசனின் பெற்றோர்களுடன் ரம்யாவையும், மணிவாசனையும், பொலிசார் காரில் அனுப்பி வைத்தனர். இந்த கார் மணப்பாறை-குளித்தலை மெயின் ரோட்டில் மேட்டுபட்டி அருகே சென்றபோது, 2 காரில் ஆயுதங்களுடன் இருந்த ரம்யாவின் உறவினர்கள் ரம்யா சென்ற காரை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து தாக்கினர்.

பின்னர் காரில் இருந்த ரம்யாவை தாங்கள் வந்த ஒரு காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். மற்றொரு காரில் காத்திருந்தவர்கள் மணிவாசன் மற்றும் அவருடன் இருந்தவர்களை தாக்கினர்.

இதில் மணிவாசன் மற்றும் அவரின் தந்தை சேகர், தாய் அமுதா ஆகியோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் ரம்யாவை கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

பாலவிடுதி அருகே உள்ள சிங்கம்பட்டியில் ரம்யாவை கடத்தி வைத்திருப்பது பொலிசாருக்கு தெரியவந்ததால், சிங்கம்பட்டிக்கு விரைந்து சென்று ரம்யாவை மீட்டு குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.