இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த அணியினருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொணடனர்.
அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பில் நடைபெற்றது.
இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பேச்சின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியாவுக்கு விஜயம் செய்து தன்னுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுமாறு மோடி அழைப்பு விடுத்தார்.
கூட்டமைப்பினரின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படியும் அங்கிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மோடி பணிப்புரை விடுத்தார்.