பனாமாவைச் சேர்ந்த 'குனா' எனும் பழங்குடி மக்களின் பாரம்பரிய வடிவம் காலணியில் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நிறுவனமான Nike புதிதாக அறிமுகம் செய்யவிருந்த தனது காலணியை மீட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
Nike நிறுவனம் ஜூன் 6ஆம் தேதி வெளியிடவிருந்த தனது Air Force 1 காலணியில் 'mola' எனும் தமது பாரம்பரிய வடிவத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக 'குனா' சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காலணி மீட்டுக்கொள்ளப்படுவதோடு அச்சமூகத்தினரிடையே முக்கிய அங்கம் வகிக்கும் சின்னத்தைப் பயன்படுத்தியதற்காக இழப்பீடும் கோருவதாகப் பழங்குடியினரின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உலக அளவில் பல பழங்குடி மக்களின் அனுமதியில்லாமல் அவர்களுக்குச் சொந்தமான பாரம்பரிய அம்சங்களைப் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்திவருவது வழமையாகிவிட்டதாக 'குனா' சமூகத்தினரின் தலைவர் கூறியுள்ளார்