உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
குண்டுதாரிகளின் முதுகுப் பொதியில், இவ்வாறான குண்டு இருந்துள்ளமை தொடர்பில், விசாரணைகளின் போதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் என்றும் இராணுவ தரத்திலான வெடிபொருள்களை இவர்கள் பயன்படுத்தியுள்ளமை, நம்பமுடியாத உண்மை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிச்சம்பவம் இடம்பெற்றதை அடுத்தும் கூட, TNT மற்றும் RDX போன்ற வெடிபொருள்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரியவருகின்றது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, இவ்வாறான வெடிகுண்டுகளை, உலகின் பல இடங்களிலும் பயன்படுத்தியுள்ளனர் என்றும் வெடிகுண்டுகளில் கலக்கப்படும் இரசாயனங்கள், சரியான அளவில் கலக்கப்பட்டிருந்தால், பேரழிவு ஏற்படக்கூடும் என்றும், விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான நுட்பங்கள், வெளிநாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற பின்னர், தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட பாணந்துறை பகுதியிலுள்ள வீடொன்றை, பொலிஸார் முற்றுகையிட்டிருந்தனர். வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட பகுதியாக அது இருப்பதற்கான ஆதாரங்கள் அங்கு சிக்கியதாகவும் இரசாயனங்கள் நிரப்பப்பட்டு எரிக்கப்பட்ட இரண்டு கலன்களை, பொலிஸார் கைப்பற்றியதாகவும், ஆனால், குண்டுதாரிகளால் அங்கு இருந்த சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் உடலில் இருந்து, மின்குமிழ்களுக்குப் பயன்படுத்தும் நுண்ணிழையைக் கண்டுபிடித்ததாகவும் அதேபோன்ற சிறிய கம்பி, பாணந்துறையில் முற்றுகையிட்ட வீட்டிலிருந்து கண்டுபிடித்ததாகவும் தெரியவருகின்றது.
இந்தத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துச் சாட்சியங்களும், பரிசோதனைக்காக, ஆய்வுக்கூடத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.