வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்! ஐ.நா கடும் எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 14, 2019

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்! ஐ.நா கடும் எச்சரிக்கை

இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களிற்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலையை தடுப்பதற்கான ஐ.நா.வின் விசேட ஆலோசகர் அடமா டைங் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்பு குறித்த ஐ.நா.வின் விசேட ஆலோசகர் கரன் ஸ்மித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.

மதத்தின் பெயரால் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.வழிபாட்டுத்தலங்கள் வர்த்தக நிலையங்கள் ஆகியனவற்றின் மீதான தாக்குதல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஆசியாவில் தேசிய மற்றும் கடும்போக்குவாத கொள்கைளை பின்பற்றுபவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதை புலப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் இது சிறுபான்மையினத்தவர்களை ஆபத்திற்குள்ளாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

உடனடி நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக இந்த குரோத தாக்குதல்களை தடுப்பது இலங்கையின் அனைத்து இன மற்றும் மத குழுக்களினதும் அரசாங்கத்தினதும் நலனிற்கு முக்கியமான விடயம் எனவும் ஐ.நா. ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இன ஆயுதமோதலின் காலகட்டத்திலிருந்து முன்னோக்கி செல்ல முயல்கின்றது. ஆனால் இந்த தாக்குதல்கள் இலங்கையை பின்னோக்கி கொண்டுசெல்கின்றன என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சமூகத்தவர்களை பாதுகாப்பதற்காக படையினரை உடனடியாக ஈடுபடுத்தியதற்காகவும் பொய்யான தகவல்கள் மற்றும் வன்முறைகைள தூண்டும் தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காகவும் ஐ.நா. ஆலோசகர்கள் இலங்கை அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவங்களையும் கடந்தகால சம்பவங்களையும் விசாரணை செய்து அவற்றிற்கு காரணமானவர்களை நீதியின் முன்னிலையில் நிறுத்துமாறும் ஐ.நா. ஆலோசகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அரசாங்கம் குரோதமும் பாராபட்சமும் பரவுவதை அனுமதிக்கப்போவதில்லை என்பதை தனது நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தவேண்டும், என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் இலங்கை ஒரு பன்முகத்தன்மை காணப்படும் நாடு இலங்கையராகயிருப்பது என்பது பௌத்தர்களாகயிருப்பது இந்துக்களாக கிறிஸ்தவர்களாக முஸ்லீம்களாகயிருப்பதாகும் என்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.