ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டால் அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மீது எதிரணியால் சுமத்தப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நீண்ட விளக்கமளித்துள்ளார்.
தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு கோரியதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டது, தற்கொலையாளிகளான சகோதரர்களின் தந்தை இப்ராஹிம் ஹாஜியாருடனான உறவு குறித்து வெளியான செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதற்கமைய அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த ரிஷாட், அவை பொய்யானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் கேட்டுக்கொண்டால் உடனடியாக பதவி விலக தயாராக இருக்கிறேன் என்றும் தனது கட்சியின் இரண்டு பிரதியமைச்சர்களும் பதவி விலகி, அனைவரும் பின்வரிசையில் இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேராவின் கருத்து கவலையளிப்பதாகவும் அது பிரதமரின் கருத்தை போலவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.