ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை ஹிஸ்புல்லாவிற்கு தெரியும்: யோகேஸ்வரன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 23, 2019

ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை ஹிஸ்புல்லாவிற்கு தெரியும்: யோகேஸ்வரன்


மட்டக்களப்பில் இயங்கிய ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு தெரியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் தொடர்பாகவும் கிழக்கு ஆளுநருக்கு தெரியுமென யோகேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

புலிகள் காலத்தில்கூட இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் பயப்படவில்லை. ஆனால், இன்று ஹோட்டல்களுக்கே குண்டு வைப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகைதர அச்சமடைவதாகவும் யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதனால் அந்நிய செலாவணி பெரிதும் இழக்கப்படுகின்றதை பற்றி சிந்திக்காமல், ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவியை காப்பற்றிக்கொள்ளவும் மீண்டும் ஆட்சியை பிடிக்கவுமே செயற்படுகின்றனர் என குறிப்பிட்டார்.

இதனால், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதென குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு சஹரான் தொடர்பில் அப்போதே முஸ்லிம் மக்கள் தகவல் வழங்கியும் அது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரும் அப்போது அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென யோகேஸ்வரன் இதன்போது குறிப்பிட்டார்.

சஹரான் குழுவினர் பற்றி ஹிஸ்புல்லாவிற்கு சகல விடயங்களும் தெரியும் என்றும், எனினும் வெளிப்படுத்தவில்லையென்றும் குறிப்பிட்டார்.

மேலும், முஸ்லிம் பகுதிகளுக்கு அரபு நாடுகளில் பெருமளவான நிதி வருகின்ற போதும், அதுபற்றி கவனஞ்செலுத்தவில்லையென்றும் அதுவே தற்போது பாரிய அழிவுக்கு வித்திட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதுமட்டுமன்றி, இனவேறுபாடற்ற மற்றும் இலஞ்ச ஊழலற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.