இமாலய வெற்றியீட்டிய மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 23, 2019

இமாலய வெற்றியீட்டிய மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.

அதற்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்திய மக்களுக்காக தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் மோடிக்கும் அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் எதிர்வரும் வருடங்களில் மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் பல மைல்கற்களை இந்திய மக்கள் அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் இலங்கை மக்களுக்கு விசேடமாக தமிழ் பேசும் மக்களுக்கு பிரதமர் மோடியும் இந்தியாவும் நல்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தர தீர்வினை எட்டும் முகமாகவும் தெற்காசிய பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தினையும் ஸ்திரத்தன்மையினையும் நிலைநாட்டும் முகமாகவும் மிக நெருங்கி செயலாற்ற ஆவலாகவுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.