இனம் - சமயம் - அரசியலை மறந்து பயங்கரவாத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவோம்! சிறிசேன - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 10, 2019

இனம் - சமயம் - அரசியலை மறந்து பயங்கரவாத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவோம்! சிறிசேன



இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதை மறந்து விடக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


கண்டி மாவட்டத்தின் அரசியல் தலைமைகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன் இன்று பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் சவாலாக அமைந்துள்ள பயங்கரவாதம் எனும் பொது எதிரியை ஒழிப்பதில் நாடு என்ற வகையில் நல்லிணக்கம் மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறில்லாது இனம், சமயம் என்ற ரீதியில் பிரிந்து ஒருவரை ஒருவர் குரோதத்துடன் பார்க்க ஆரம்பித்தால் அதனால் வெற்றிபெறுவது எதிரியே என்றும் நாட்டின் தற்போதைய சிறுவர் தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் இந்த எவரும் இடமளிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


எனவே அரசியல் கருத்துக்கள் மற்றும் இனவாதக் கருத்துக்களை தெரிவிப்பதைத் தவிர்த்து எதிரியை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணைவோம் என அனைத்து இலங்கையர்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இலங்கை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எமது பாதுகாப்பு படையினர் ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், ஒரு சிலரது குரோத வார்த்தைகள், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் இருக்க வேண்டிய நல்லிணக்கமும் ஒத்துழைப்பும் இல்லாமல் போவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் அனைத்து அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் மிகவும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அந்த செயற்பாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுத்து, அதனை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து அரசாங்க அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுவர் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மாவட்ட குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கள் குறித்த பாதுகாப்பு துறை பிரதிநிதிகளுடன் இணைந்து உரிய முறையில் தமது பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை குறித்து தொடர்ச்சியாக மீளாய்வு செய்தல், போலிப் பிரசாரங்கள் மற்றும் அச்சமூட்டுதல் குறித்து மக்களுக்கு தெளிவூட்டி மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இயல்பு நிலையில் பேணுவதற்கு அரசாங்க அதிகாரிகள் தலையிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டினார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்பி.திசாநாயக்க, மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள், மத்திய மாகாண பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.