அவசரகால சட்டம் நீடிக்கப்படுவதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வரும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கலாமென கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. நேற்று நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்த அவசரகால சட்டவிதிகளை அமுல்படுத்த நாடாளுமன்றம் அனுமதியளித்தது. எனினும், அதன் கீழான விதிகளை மறுநாளே ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இந்த விதிகள் ஆபத்தானவை என கூட்டமைப்பு உணர்கிறது. பல்கலைகழக மாணவர்கள் கைது, மற்றும் வடக்கு கிழக்கு சோதனை கெடுபிடிகள் பற்றி நேற்று நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிற இடங்களில் பேருந்துகளில் இருந்து மக்கள் இறக்கி நடத்தப்படுவதில்லை, ஐ.எஸ் அபாயமில்லாத வடக்கில் ஏன் நாட்டிலேயே இல்லாத கெடுபிடி என சிறிதரன் எம்.பி விசனம் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை எதிர்த்த வாக்களித்து, எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தில் உள்ள ஆபத்தான் அம்சங்களை சட்டவிளக்கங்களுடன் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். அவசரகால சட்டத்தின் கீழ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவரது சடலம் பழுதடைகிறது எனில், படையினரே அந்த உடலை புதைக்க முடியும் என்ற ஏற்பாடுகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனால், அவசரகால சட்டத்தை எதிர்க்கலாம் என கொள்ளையளவில் முடிவெடுக்கப்பட்டது.
அவசரகால சட்டத்தை ஒரு மாதத்தின் பின்னரும் தொடர செய்வதெனில், நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.