புலிகளின் போராட்டம் நியாயமானதென சிங்களவர்களே கூறும் நிலைமை வந்துள்ளது! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, May 16, 2019

புலிகளின் போராட்டம் நியாயமானதென சிங்களவர்களே கூறும் நிலைமை வந்துள்ளது!


ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட கொள்கையற்ற தாக்குதல்களையடுத்து விடுதலைப் புலிகள் காலத்தில் நடாத்தப்பட்ட போராட்டத்திற்கும் இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கும் பாரிய வேறுபாடுகள் இருப்பதாக சிங்களத் தலைவர்களே சொல்ல ஆரம்பித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றைக்கு தமிழின விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நியாயம் இருந்ததாக சிங்களப் பேரினவாதிகளே சொல்லும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக் தெரிவித்துள்ளார்.


ஆயினும் ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகளால் சிரியா, ஈராக் நாடுகளில் ஏற்பட்டு இருக்கின்ற நிலைமை போன்று இலங்கையிலும் வரமுடியாது. அவ்வாறு இலங்கை வருவதற்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறு இலங்கை வருவதென்பது எல்லோரையுமே பாதிக்கும் என்றார்.

யாழில் இன்று நடாத்தி யஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்தமாதம் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களைப் பார்த்தால் ஒரு கொள்கைக்காக அல்லது தேவைக்காக நடாத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகையினாலே உலகம் முழுவதும் மட்டுமல்லாது இந்த நாட்டில் இருக்கிற ஒவ்வொருவரும் இது முற்றுமுழுதாக ஒரு பயங்கரவாதச் செயலாகவே சொல்கின்றார்கள்.

குறிப்பாக முஸ்லிம் தலைவர்களே இதுவொரு பயங்கரவாதச் செயல் என்று சொல்கின்றார்கள். ஏனென்றால் ஒரு கோரிக்கையின் அடிப்படையில் இந்த பயங்கரவாதச் செயல்களைச் செய்யவில்லை. அதனால் தான் இவ்வாறான சம்பவங்களையும் இதில் ஈடுபட்டவர்களையும் அந்த மக்களும் எதிர்க்கின்றனர்.


இந்தவிடயத்தில் சிங்களத் தலைவரக்ளே தமிழீழ விடுதலைப் புலிகள் காலபோராட்டத்திற்கும் இதற்கும் பாரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கின்றார்கள். மிகப் பெரிய சிங்களபேரினவாதிகளே இதனைச் சொல்கின்றார்கள். அதாவது அந்த நேரத்தில் தமிழ் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல்கள் என்பது முழுமையான பயங்கரவாதச் செயல் தான். ஆக இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டால் உலகலாவியரீதியில் நடந்து கொண்டிருப்பதுபோல் இங்கும் ஏற்படலாம்.

ஆகையினால் சிரியா அல்லது ஈராக் போல இலங்கை வர முடியாது. அவ்வாறு வருவதற்கு நாங்கள் கூட அனுமதிக்க முடியாது. அவ்வாறு வருவதென்பது எல்லோரையும் பாதிக்கும். அது எங்களையும் பாதிக்கும்.ஆகவே அப்படியான நிலைமை ஏற்படாமல் அதை ஆரம்பத்திலே கட்டப்படுத்தவது மிகமிக முக்கியமான ஒரு தேவை. ஆகவே அப்பாவி மக்களைப் பாதிக்காத வகையில் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியது அவசியமானது.

குறிப்பாக எங்களுடைய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது போராளிகள் மிகமிக குறைவு. ஆனால் அனைத்து மக்களையும் போராளிகளாகவே பார்க்கின்ற நிலைமைதான் இருந்தது. ஆகையினால் மக்கள் பெரிய அளவிலே பாதிக்கப்பட்டார்கள்.

ஆனால் இன்று இந்தப் சம்பவங்களில் மிகக் குறைவான ஏறக்குறைய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் தான் இருந்திருக்கிறார்கள்.

அவ்வாறு இருந்தும் இன்றைக்கு முஸ்லீம் மக்கள் மிகப் பெரியஅளவில் பாதிக்கப்படுகிறார்கள். அது சரியா பிழையா என்ற வாதம் இருக்கலாம். ஆனாலும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம். ஆகவே இராணுவமாக இருந்தாலும் அரசாக இருந்தாலும் கூடியளவில் மக்களைப் பாதுகாத்தக் கொண்டு இந்தநிலைமைகளைச் செயற்படுத்த வேண்டும்.

இந்த நிலைமைகளைச் செயற்படுத்துவதென்றால் இராணுவம் பொலிஸ் என அனைவரும் செயற்பட்டுக் கொண்டிருந்தால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு கட்டுப்படுத்தவது கட்டாயமான தேவை.

ஏனெனில் இந்த நிலைமைகள் தொடர்ந்தால் இன்றிருக்கும் நிலைமையைக் காட்டிலும் மிக மோசமாக நாங்கள் பாதிக்கப்படுவோம். ஆகையினால் இதனைக் கடுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.