அமைச்சர் ரிசாட் பதீயூதின் பதவிவிலகுவதே நல்லது : சித்தார்த்தன் அதிரடி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 16, 2019

அமைச்சர் ரிசாட் பதீயூதின் பதவிவிலகுவதே நல்லது : சித்தார்த்தன் அதிரடி!



அமைச்சர் ரிஷாட் பதீயூதினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களது விருப்பமென கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.இணுவிலில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபனின் இல்லத்தில் இன்று செய்திாளர் சந்திப்பொன்றை த.சித்தார்த்தன் நடாத்தியிருந்தார்.


இதன் போது அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சர் ரிசாட் பதியுதினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்த விவாதம் வருகின்றபோது ரிசாட் அமைச்சராக இருந்தால் அந்தப் பிரேரணைக்கு ஆதரவாகவே நாங்கள் வாக்களிப்போம்.

இதுவே எங்களது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பமாக உள்ளது.



ஆனாலும் அந்தநேரத்தில் ரிசாட் அமைச்சராக இல்லாவிட்டால் நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை நாடாளுமன்றம் விலத்துமாறு கேட்க முடியாது.

ஆக மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை நாடாளுமன்றம் தீர்மானிக்க முடியாது. ஆயினும் ரிசாட் மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால் நாமும் நிச்சயமாக ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.

எதுஎவ்வாறிருப்பினும் நாடாளுமன்றத்தில் ரிசாட் அமைச்சராக இருந்தால் தான் நம்பிக்கையில்லாப் பிரேரனை வரும். அவர் அமைச்சராக இல்லாவிட்டால் அந்தப் பிரேரணை வராது. இது போலவே முன்னைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் எதிரா கநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது.



ஆனால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் அந்த பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கவும் இல்லை. தீர்மானம் நிறைவேற்றவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையினால் அரசியலில் எதுவும் எந்தநேரத்தில் நடக்கலாம். ஆகவே ரிசாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு குற்றச்சாட்டுக்கள் பார்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அந்த விவாதங்களில் பிற்பாடுதான் நாங்கள் ஒரு முடிவெடுத்து அதில் வாக்களிப்போம். அதற்கிடையில் கூட்டமைப்பு கூடி ஒரு தீர்மானத்தை எடுக்குமென்று நம்புகின்றேன்.

ஆனால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. அவை நிருபிக்கப்படுகிறதா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் நாட்டில் சுமூகமான நிலையைக் கொண்டு வருவதென்றால் சிறுது காலமோ என்னவோ- அது அவரைப் பொறுத்தது அமைச்சராக இல்லாமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் அமைச்சராக இருந்தால் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்குமென்றுதான் நான் நம்புகின்றேன் என்றார்.