யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர், சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மூவரையும் ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.
அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலையில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் மீட்கப்பட்டது. அதனால் சிற்றுச்சாலை நடத்துனரும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் இன்று 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாணவர்கள் இருவரும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சட்ட மா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார் மன்றுரைத்தனர்.
“மாணவர்களை பிணையில் விடுவிப்பது மட்டுமல்ல, அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதே எமது நோக்கமாகும்.
பொலிஸார் இந்த வழக்கை உரியமுறையில் விசாரணை செய்தால் மாணவர்கள் இருவரும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் வழக்கிலிருந்தே விடுவிக்க முடியும்” என்று சட்டத்தரணி கே.சுகாஷ் சமர்ப்பணம் செய்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, மூவரையும் தலா ஒரு லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.