பிறக்க போகும் குழந்தையை கூட பார்க்காமல் வெடித்து சிதறிய ஐ.எஸ் பயங்கரவாதி! கதறும் தந்தை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 15, 2019

பிறக்க போகும் குழந்தையை கூட பார்க்காமல் வெடித்து சிதறிய ஐ.எஸ் பயங்கரவாதி! கதறும் தந்தை


எனது மகன் வெளிநாட்டில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டப் படிப்பு பட்டத்தினை 6 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டார். அவர் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டபோது கொழும்பு சட்டக்கல்லூரியில் படிப்பதற்கான தகுதியை பெற்றிருந்தார். அப்போது அவருடைய மனைவி குழந்தையை பிரசவிக்கவிருந்தார். தற்போது குழந்தைக்கு வயது 10 நாட்கள் ஆகின்றன” என கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத் என்பவருடைய தந்தை அஹமட் லெப்பை அலாவுதீன் என்பவர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சாட்சியமளித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பந்தமான பிரேத பரிசோதனை செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இடம்பெற்றபோது தற்கொலைக் குண்டுதாரியின் தந்தை, தாய் மற்றும் உறவு முறை சகோதரர் ஒருவர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.இதன்போது சாட்சியமளித்த தற்கொலை குண்டுதாரியின் தந்தை,

நான் ஒரு வியாபாரி, இலக்கம் 121/03 மத்திய வீதி, மட்டக்குளி எனும் முகவரியில் வசிக்கின்றேன். நான் திருமணமானவன். எனக்கு 5 பிள்ளைகள் . அஹமட் முர்சித் அலாவுதீன், பாதிமா சுமையா அலாவுதீன், பாதிமா அம்லா அலாவுதீன், அஹமட் முவாத் அலாவுதீன் மற்றும் அஹமட் முஸ்தாக் அலாவுதீன் என்பவர்களே அவர்கள். இந்த சம்பவத்தில் என்னுடைய 4ஆவது மகன் உயிரிழந்தார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த சபியா செயிதுன் அப்துல் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். மகன் திருமணம் முடித்து இன்றுடன் ஒருவருடமும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. மகனுடைய வயது 22 ஆகும். மகன் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டபோது அவருடைய மனைவி குழந்தையை பிரசவிக்கவிருந்தார். அதன் பின்னர் கடந்த 05 ஆம் திகதியே குழந்தையை பிரசவித்தார். தற்போது குழந்தைக்கு வயது 10 நாட்கள். மகன் தொழில் செய்யவில்லை. சட்டத்தை கற்றுக்கொண்டார் அவருடைய சட்டப்படிப்பிற்கான பட்டமளிப்பு விழா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்றது. கொழும்பு சட்டக்கல்லூரிக்கான தகுதிப்பரீட்சையில் சித்தியடைந்திருந்தார் அவர் இந்த வருடம் சட்டக்கல்லூரிக்கு செல்லும் நோக்கில் இருந்தார். மகன் சாய்ந்தமருதுக்கு திருமணம் முடித்த பின்னரே சென்றார். மகன் திடீரென கொழும்பு வந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் செல்வார். அவர் எம்மை இறுதியாக ஏப்ரல் 14ஆம் திகதியே பார்க்க வந்தார். என்னுடைய பெரிய மகள் அதாவது அவருடைய அக்கா ஏப்ரல் 13ஆம் திகதி குழந்தையை பிரசவித்திருந்தார். அவருடைய அக்காவின் குழந்தையை பார்க்க வந்த அவர் அன்றைய நாள் முழுவதும் எம்முடன் இருந்துவிட்டு இரவு 09 மணியளவில் கல்முனைக்கு செல்வதற்கு பஸ் ஏறுவதாக கூறிவிட்டு கொழும்புக்கு சென்றார்.அவர் அவருடைய மனைவி பிரசவிக்கவிருந்த குழந்தைக்கான உடைகள் அனைத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அதன் பிறகு மகன் எம்முடன் கதைக்கவில்லை. இருப்பினும் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை 11.30 மணியளவில் மகனின் மனைவி எனது பெரிய மகனுடன் தொடர்பினை மேற்கொண்டு முஹான் வந்தாரா என வினவியிருந்தார். அதற்கு அவர் இங்கு வரவில்லை என மகன் கூறியிருந்தார். “நான் மட்டக்களப்பில் இருக்கின்றேன் நான் வந்த வாகனம் உடைந்து விட்டது” என்று முஹாத் வட்ச்அப் தொடர்பினை மேற்கொண்டு அவருடைய மனைவிக்கு கூறியதாக அவர் எனது பெரிய மகனிடம் கூறியிருந்தார்.

அதன் பின்னர் நாம் தேடிப்பார்த்தும் எமக்கு எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் சி.ஐ.டி. ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். பின்னர் நான் சி.ஐ.டி. க்கு சென்று வாக்குமூலம் கொடுத்தேன். அப்போது என்னுடைய மகனுடைய படம் மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தை என்னிடம் காண்பித்தனர். நான் அதை இனங்கண்டுகொண்டேன். இன்று எனது மகனுடைய தலைப்பகுதியையும் இனங்கண்டுகொண்டேன் என்றார்.இறந்தவரின் தாயாரான பகீர் மொஹிதீன் பல்கீஸ் சாட்சியமளிக்கும்போது கீழ்க்கண்டவாறு கூறினார்.

எம்முடைய வீட்டின் இலக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. மத்திய வீதி கொழும்பு என்று ஞாபகம் உண்டு. எனக்கு 05 பிள்ளைகள் உள்ளனர் என்னுடைய 4ஆவது மகனான முஹாத் என்பவரே உயிரிழந்தார். அவர் திருமணம் முடித்திருந்தார். மகன் தொழில் செய்யவில்லை. மகனின் வாழ்க்கையை நடத்துவதற்கு அவருடைய அப்பா ஒவ்வொரு மாதமும் 30000 ரூபா பணத்தை அனுப்பிவைப்பார். அவர் கல்விகற்பதை மட்டுமே முன்னெடுத்தார். என்னுடைய மகன் வெள்ளை நிறமுடையவன். எனினும் அவருடைய தலை எரிந்திருந்தது. அவருடைய சடலத்தை இனம் காண்பதற்கு அவருடைய மனைவி வரவில்லை. அவள் குழந்தை பிரசவித்து இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன என்றார்.

இங்கு 2ஆவது சாட்சிக்காரரான இறந்தவரின் உறவுமுறை சகோதரர் மொஹமட் ரிஸ்வி அஹமட் கீழ்கண்டவாறு சாட்சியமளித்தார்.நான் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரி. நான் இறந்தவரின் சகோதரியான பாதிமா சுமையா அலாவுதீனை திருமணம் முடித்துள்ளேன்.முஹான் இரண்டு காரணங்களால் சாய்ந்தமருதில் தங்கியிருந்தார். ஒன்று அவருடைய மனைவிக்கு குழந்தை கிடைக்கவிருந்தமை மற்றையது அவருக்கு சிங்களம் படிக்க வேண்டும் என்ற தேவை ஆகியனவாகும். அவர் சாய்ந்தமருதில் சிங்கள வகுப்பிற்கு சென்றார். அவருக்கு சிங்களம் பேசமுடியாது.

அவர் வெளிநாட்டில் படித்தவர். அதேபோன்று இலங்கை பாடசாலைகளிலும் கல்வி கற்றுள்ளார். அவர் 04 வருடங்கள் சட்டத்தை படித்து பட்டம் பெற்றுள்ளார். நான் அவரை இறுதியாக ஏப்ரல் 14 ஆம் திகதியே பார்த்தேன். எனது மனைவி குழந்தை பிரசவித்திருந்தார் அந்த குழந்தையை பார்ப்பதற்கே அவர் வந்திருந்தார். இரண்டாவது மச்சானுக்கு தம்பி அனுப்பியிருந்த கடிதத்தை நாம் சம்பவ தினத்திற்கு மறுநாளான 22 ஆம் திகதியே பார்த்தோம். “என்னை தேட வேண்டாம் நான் இதற்கு பிறகு வரமாட்டேன் அம்மா அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்ளவும் எனக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றார்.

இறந்தவரின் மரணம் நடைபெற்ற முறை சம்பந்தமாக பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரி மூலம் கிடைக்கப்பெற்ற பின்னர் மரண பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் அறிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக நீதவான் பரிசோதனை வரும் மே மாதம் 23 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது