ரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 25, 2019

ரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்ஷவினருக்கு இடையில் எந்தவித போட்டியும் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து,  கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்துக்கு எதிராக எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்க நாம் ஒருபோதும் யோசிக்கப்போவதில்லை.

மேலும், அரசாங்கத்துக்கு தற்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்க வேண்டியத் தேவையுமில்லை என்றே தெரிகிறது. ஆனால், தற்போது இதுதொடர்பில் ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமித்துள்ளது.

ஜே.வி.பி. நாடாளுமன்றை கலைப்பது தொடர்பிலான பிரேரணையொன்றை கொண்டுவந்தால் நாம் நிச்சயமாக ஆதரவளிப்போம்.

எனினும், அரசாங்கத்திலுள்ள பிரச்சினைகளை மூடிமறைக்கவே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  அதன் ஓர் அங்கமாகவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் அமைந்துள்ளது.

அரசாங்கம் தவறு செய்யவில்லை என்றால், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாதத்திற்கு எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து, எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதையே அரசாங்கம் இலக்காகக்கொண்டு செயற்பட்டு வருகிறது.

ரிஷாட் பதியுதீன் நல்லவர் என்றால், அரசாங்கம் அவருக்கே வாக்களிக்கட்டும். அதைவிடுத்து, இதை மூடிமறைக்கும் விதமாக செயற்படக்கூடாது. இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புதான் பலவீனமடையும்.

இந்த அரசாங்கமானது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களை அடக்குவதில்தான் தற்போது மும்முரம் காண்பிக்கிறது.  பொலிஸையும் அரசாங்கம் இதற்காகத்தான் கடந்த 4 வருடங்களாக பயன்படுத்தியது.

அத்தோடு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுதொடர்பில் ராஜபக்ஷவினருக்குள் எந்தவித போட்டியும் நிலவவில்லை என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், உரிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எமது வேட்பாளரையும் அறிவிப்பார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி யாரை வேட்பாளராக நியமித்தாலும் நாம் அஞ்சப்போவதில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.