யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே அகதிகளாக வடக்கு கிழக்கில் வாழும் நிலையில் வெளிநாட்டு அகதிகளையும் அங்கு தங்க வைப்பது எந்தவகையில் நியாயமாகும்? என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு வெளிநாட்டு அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே மறுப்புக்களை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்ப் பிரதிநிதிகள் இதற்கு ஆதரவளிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை வவுனியாவில் தங்க வைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்நதும் கருத்து வெளியிட்ட அவர், “போர் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தில் இன்னமும் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்ற நிலைமைகளே உள்ளன. வலிவடக்கில் அகதிமுகாம்கள் இன்னமும் காணப்படுகின்றன. சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாது மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தாயகம் திரும்பமுடியாது தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி சிந்திக்காது, பிற நாடுகளின் அகதிகளை வடக்கில் உள்வாங்க முயல்வதென்பது எந்தவகையில் நியாயமாகும். அதேநேரம் எட்டுமாகாணங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இவர்களை ஏற்க மறுத்திருக்கும் பின்னணி பற்றி ஆராயாது வவுனியாவில் இவர்களை தங்கவைப்பதற்கு அனுமதித்து தமிழ் பிரதிநிதித்துவங்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
தமிழர்கள் வந்தவர்களை வரவேற்கும் பாரம்பரிய பண்பு நிறைந்தவர்கள். ஆனால் அவர்களின் அன்றாட வாழ்வே அவலங்கள் நிறைந்ததாகவும் அச்சுறுத்தல் நிறைந்ததாகவும் நகர்ந்து செல்கின்ற நிலையில் புதிதாக அகதிகளை உள்ளீர்த்துக் கொள்வதானது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
மேலும் இந்த அகதிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கப்போகின்றார்கள். இவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எவ்விதமான விளக்கங்களும் இன்றி தங்கவைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.