நாட்டின் அமைதியை சீர்க்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தற்போது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இத்தகைய வன்முறையை தூண்டும் வகையிலாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து முதலில் கண்டறியப்பட்டவுடன் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பின்னர், அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்துவர் எனவும் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து முடக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.