அரவக்குறிச்சி தொகுதியில் பேசிய கமல்ஹாசனின் சர்ச்சை கருத்து தொடர்பாக கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி வழங்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு ஆகிய தேர்தல் பணிகளில் 5 ஆயிரத்து 508 ஊழியர்கள் ஈடுபடவுள்ளதுடன், பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 300 சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் இந்த இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, வாக்காளர்களின் நன்மை கருதி அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 297 வாக்குச்சாவடிகளும், சூலூரில் 329 வாக்குச்சாவடிகளும், ஒட்டப்பிடாரத்தில் 291 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்