மன்னார் – வில்பத்து சரணாலயத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச்சொரூபம் இனந்தெரியாத விசமிகளினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ள போதிலும் சம்பவம் குறித்து நேற்று (புதன்கிழமை) மாலையே தெரியவந்துள்ளது.
மக்கள் நடமாட்டமில்லாத நேரம் குறித்த நாசகார செயல் இடம்பெற்றிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள மிகவும் சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.