ஐ.எஸ் தாக்குதலுக்கு எதிராக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

ஐ.எஸ் தாக்குதலுக்கு எதிராக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு

இஸ்லாம் தேசம் (ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகரில் வரும் வெள்ளிக்கிழமை (31) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஐந்து சந்திப் பகுதியில் நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் கூடும் இஸ்லாமியர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 250இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 500இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்களுக்கு சிரியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் உரிமை கோரியிருந்தது.

அதனையடுத்து புத்தளம் உள்ளிட்ட நாட்டில் சில இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.