பாதுகாப்புச் செயலாளராக கோட்டா செயற்பட்ட காலத்தில், இராணுவ புலனாய்வு அங்கத்தவர் என குறிப்பிட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் மற்றும் 26 பேருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த அமைப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவங்ச ஆகியோரையும் சந்தித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தௌஹீத் ஜமாத், பொதுபல சேனா போன்ற அமைப்புகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் காலத்தில் ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டன.
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற சந்தேக நபருக்கு புலனாய்வுப் பிரிவு சம்பளம் வழங்கியுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் காலத்தில் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்பட்ட இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான 26 பேருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கான இணைப்புச் செயலாளராக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் இருந்துள்ளார்.
தௌஹீத் ஜமாத் அமைப்பின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் வெளியிடுவோம். அப்போது தேசப்பற்றாளர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருக்க இந்த மேஜர் ஜெனரல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தௌஹீத் ஜமாத் அமைப்பின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். அந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இருந்துள்ளார். அந்த அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவையும் சந்தித்துள்ளனர்.
இவர்கள் சிங்கள இனவாதிகள், ஒரு அடிப்படைவாத அமைப்பு மற்றுமொரு அடிப்படைவாத அமைப்புக்கு உதவியுள்ளது.
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் ஷரியா சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை முன்னாள் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷரியா சட்டத்திற்கு உதவிய அமைப்புகள் இருக்கின்றன.
2013ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி அக்குரணை பிரதேசத்தில் கல்லூரி ஒன்றுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சரியான புலனாய்வு பிரிவுகள் இருந்திருந்தால், இந்த அமைப்புகள் உருவாகும்போது கவனம் செலுத்தியிருக்க வேண்டும்” என கூறினார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவ காணியொன்றினை பெற்றுக்கொடுத்தார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் நேற்று தெரிவித்திருந்தார்