இறுதித்தடவையாக அபூ பக்கர் அல் - பக்தாதி வீடியோ ஒன்றில் தோன்றிய போது இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) அதன் புகழின் உச்சியில் இருந்தது. இஸ்லாமிய அரசு அதன் புதிய இராச்சியமொன்றை (கலிபேற்) பிரகடனம் செய்ததற்குப் பிறகு ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலின் அல் - நூரி பள்ளிவாசலின் பிரசங்கமேடையில் அவர் காணப்பட்டார்.
சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு அதுவும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் சிதறியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில் கடந்த திங்கட்கிழமை இன்னொரு வீடியோவில் அல் - பக்தாதி தோன்றினார்.
அந்த வீடியோவை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் ஊடகப்பிரிவின் ஒரு அங்கமான அல் - புர்கான் வெளியிட்டது.
அந்த 18 நிமிட வீடியோவில் அல் - பக்தாதி அறையொன்றின் தரையில் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு சில சீடர்களுடன் பேசிக்கொண்டிருப்பதையும் பின்னணியில் க்ளாஷ்நிக்கோவ் ரைபிள் ஒன்று சுவரில் சார்த்திவைக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
மொசூல் நகரில் அவர் தோன்றியதற்குப் பின்னரான 5 வருடங்களில் இஸ்லாமிய அரசு இயக்கம் கைப்பற்றி வைத்திருந்த பிராந்தியங்களில் அநேகமாக சகலதையும் இப்போது இழந்துவிட்டது.
அவர் தங்கியிருந்து பிரசங்கம் செய்துகொண்டிருந்த அல் - நூரிபள்ளிவாசலின் இடிபாடுகள் இப்போது ஈராக் அரசாங்கம் வசமிருக்கின்றன.
இஸ்லாமிய அரசின் தலைநகர் என்று வர்ணிக்கப்பட்ட ரக்கா நகர் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் உதவியுடன் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
சிரியாவில் இஸ்லாமிய அரசு இறுதியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிய பகுதியான பாஹஸஸ் பகுதியையும் ஒருமாதத்திற்கு முன்னர் அவர்கள் குர்திஷ் படைகளிடம் இழந்தனர்.
ஆகவே எதற்காக அல் - பக்தாதி திரும்பி வந்தார்? இஸ்லாமிய அரசு இயக்கத்தின் இன்றைய நிலையின் மூலம் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
அந்த இயக்கம் சந்தித்திருக்கக்கூடிய இழப்புக்களையும் பொருட்படுத்தாமல் தொடங்கிய போரைத் தொடர்வதற்கு விரும்புகின்றதென்பதை வீடியோ உணர்த்துகின்றது. தலைவர் பக்தாதி அவரின் இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரும் தப்பி உயிர் வாழ்கின்றார் என்பதை உலகிற்கு விசேடமாக இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் அது கூறுகின்றது.
அல்-பக்தாதியின் தலைக்கு 2 கோடி 50 இலட்சம் டொலர்கள் விலை பேசப்பட்டிருப்பதுடன் மேற்குலகினதும் மேற்கு ஆசியாவினதும் புலனாய்வுப்பிரிவுகள் அவரைத்தேடி பாரிய வேட்டையை முடுக்கி விட்டிருந்த போதிலும் அவர் உயிருடன் ஆரோக்கியமாக இருக்கின்றார்.
புனிதப்போரைத் தொடருமாறு தன்னைப் பின்பற்றுவோருக்கு அழைப்புவிடுக்கின்றார். இது தான் அவர்களது செய்தி. இராச்சியம் வீழ்ந்திருக்கலாம். ஆனால் இஸ்லாமிய அரசு இயக்கம் ஒழிந்துவிடப்போவதில்லை.
இரண்டாவதாக அல் - பக்தாதி இந்த வீடியோவில் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். பாஹஸில் உயிரிழந்த தங்களது சகோதரர்களுக்காக பழிவாங்குவதற்காக இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் சிலுவைப்போர்காரர்களின் இல்லங்களின் மீது சரமாரியான தாக்குதல்களை எமது சகோதரர்கள் தொடுத்து மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றார்கள் என்று புலனாய்வுக் குழுவொன்றினால் செய்யப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகின்றது.
அவர் இலங்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அந்த வீடியோ ஒருவார காலத்திற்குள்ளேயே பதிவு செய்யப்பட்டிருப்பது புலனாகின்றது.
250 இற்கும் அதிகமானோரைப் பலிகொண்ட ஏப்ரல் 21 இலங்கைக் குண்டுத்தாக்குதல்கள் இஸ்லாமிய அரசு இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய மிகவும் பயங்கரமான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் ஒன்றாகும்.
இராணுவ ரீதியான பின்னடைவிற்கு மத்தியிலும் கூட அல் - பக்தாதிக்கு ஒரு வகையிலான தற்புகழ்ச்சியைக் கொடுத்திருக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பயன்படுத்தி மேலும் வன்முறைகளைத் தூண்டி விடுவதற்கு அவர் முயற்சிப்பார்.
அதையே அவர் அந்த வீடியோவில் செய்திருக்கின்றார்.
மூன்றாவதாக தன்னைப் பின்பற்றுவோரும் ஆதரவாளர்களும் செய்ய வேண்டியது என்ன என்பதை அல் - பக்தாதி கூறுகிறார். இஸ்லாமிய அரசை நிர்மூலம் செய்வதில் சிரியாவிலுள்ள குர்திஷ் படைகளும் (அவர்கள் சுன்னிகள்)ஈராக்கிலுள்ள சியா முஸ்லிம் திரட்டல் படைகளும்,தேசிய இராணுவமும் பிரதான பங்கை வகித்த போதிலும் கூட தனது இராச்சியத்தை சிலுவைப்போர்காரர்களே தோற்கடித்ததாக அல் - பக்தாதி கூறுகிறார்.
(மேற்குலக நாடுகளையே அவர் சிலுவைப்போர்காரர்கள் என்று குறிப்பிடுகின்றார்)
மத்திய காலத்தில் கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் (இன்று அது மேற்காசியாவிற்குள் வருகிறது) இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் கிறிஸ்தவ இராச்சியங்களுக்கும் இடையே நடைபெற்ற தொடர்ச்சியான மதப்போர்களின் பின்புலத்திலேயே(சிலுவைப்போர்) இஸ்லாமிய அரசின் போரை அல் - பக்தாதி குறிப்பிடுகின்றார்.
1095 ஆம் ஆண்டில் ஆரம்பித்த சிலுவைப்போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது. இஸ்லாமிய அரசு இயக்கத்தின் போர்களும் நீண்டகாலம் நீடிக்கும் என்பதையே பக்தாதி சூசகமாகக் கூறுகிறார்.
ரூசூ39;சிலுவைப்போர்காரர்களுடனும் அவர்களது மக்களுடனும் இஸ்லாத்துக்கும் அதன் மக்களுக்கும் இருக்கின்ற சண்டை மிகவும் நீண்டதொன்றாகும் என்பதே உண்மை. பாஹஸ் மீதான போர் முடிவடைந்துவிட்டது. அந்தப்போர் இஸ்லாமிய மக்களை நோக்கிய சிலுவைப்போர்காரர்களின் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி நின்றது.
அதேவேளை அது இஸ்லாமிய மக்களின் துணிச்சலையும் மீள்எழுச்சி பெறும் தைரியத்தையும்,விடாமுயற்சியையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது என்று வீடியோவில் இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
சிலுவைப்போர் என்ற பதத்தை இஸ்லாமிய அரசு இயக்கம் பயன்படுத்தியது இது முதற்தடைவ அல்ல. அந்த இயக்கத்தின் பிரசுரங்களில் மேற்குநாட்டவர்கள் எப்போதும் சிலுவைப்போர்காரர்கள் என்றே வர்ணிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இத்தடவை பக்தாதி தானாகவே ஒரு குறித்த எதிரிகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் தாக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களைக் கேட்டிருக்கிறார்.
இதனை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் மீள்எழுச்சிக்கான தந்திரோபாயத்தின் அங்கமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
எனவே உங்களது எதிரிகளை நீங்கள் எல்லோரும் தாக்கி அவர்களை மனிதவலு ரீதியாகவும் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாகவும் சகல விடயங்களிலும் தொடர்ச்சியாகப் பலவீனப்படுத்தி அவர்களது ஆற்றல் முழுவதையும் இழக்கச்செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று எமது சண்டை எதிரியை பரந்து சிதறச்செய்து பலவீனமாக்கி அழித்தொழிப்பதேயாகும்.இதுவே பக்தாதியின் புதிய அறைகூவல்.