வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த படுகொலைகளைப் புரிந்தது தாங்கள்தான் என, தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், சம்பந்தன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கரையாக்கன்தீவைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை விடுதலை செய்யுமாறு கோரியே கூட்டமைப்பின் தலைவர் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 2018.11.30ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனுடன் தொடர்புபடுத்தி கரையாக்கன்தீவைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை தடுப்புக் கட்டளை மூலம் கைது செய்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளின்போது வவுணதீவு பொலிஸாரின் படுகொலைக்கும் அஜந்தனுக்கும் தொடர்புகள் இல்லை எனவும் அக்கொலையினைச் செய்தவர்கள் வேறு நபர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக அறிகின்றேன்.
எனவே இத்தகவல்கள் சரியெனில் சந்தேகத்தின் பெயரில் இத்தனை மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஜந்தன் என்பவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்காமல் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.