தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 26, 2019

தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்

கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாநிதிமாறன், தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்று கூறினார்.

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதிமாறன் நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன்பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து இந்த பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். இந்த வெற்றிக்கு காரணம் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த தேர்தல் யுக்தி தான்.

சென்ற முறை அ.தி.மு.க. கூட்டணி இதே அளவில் வெற்றி பெற்றார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக அவர்கள் வாதாடவில்லை. தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்தார்கள். இனி அது நடக்காது. நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும். உங்களின் குரலாக உங்களுக்காக நாங்கள் எல்லோரும் உழைப்போம்.தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, அது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பை பெருக்குகின்ற வகையில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உழைத்து உங்களுக்காக குரல் கொடுத்து காப்போம் என்று உறுதியளிக்கிறோம். ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஓரம் கட்டி விட்டார்கள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

ஒரு இடத்தில் மட்டும் தப்பித்து இருக்கிறார்கள். அதுவும் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான். பண பலத்தால் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் உதறி தூசி தட்டி விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மக்கள் இன்னும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் யாரும் ஜெயித்தது கிடையாது. ஒருமித்த கருத்தோடு மக்கள் தெளிவாக தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் வாக்களித்தார்கள். சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற முடியாத காரணத்தால் இன்று மக்கள் நினைத்த மாற்றம் நடக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்தது இந்த எடப்பாடி பழனிசாமி அரசு போய்விட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அது தான் ஜனநாயக விருப்பம். இதை உணர்ந்து தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் அவர் நல்ல மனிதர்.

எப்படியாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் பார்க் கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக அவர்கள் சண்டை போட்டதே கிடையாது. இப்போது அவர்கள் செய்ய மாட்டார்கள். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவில் ஒரு பகுதி மக்கள் ஏன்? இவ்வாறு வாக்களித்தார்கள் என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உணரும். இவ்வாறு அவர் கூறினார்.