எச்சரிக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 14, 2019

எச்சரிக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!


ஊரடங்குவேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசபயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல்வாதிகளும் சமயோசிதமாக காய்களை நகர்த்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் அவர்கள், தமிழ் மக்களின் மீது இன அழிப்புயுத்தத்தை மேற்கொண்டவர்களின் பார்வை தற்போது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருப்பதாகத் தென்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு.விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு,

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல நாட்கள் கடந்துள்ளநிலையில் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது இது நன்கு திட்டமிட்ட தொடர் நடவடிக்கை ஒன்றின் அங்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வேளை வன்முறையாளர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸ் நிலையங்களுக்கு சில மீற்றர்கள் தொலைவில் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்ததாகவும் வெளிவரும் செய்திகள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் பலவீனப்படுத்தி அழிப்பதற்கு மற்றொரு சிறுபான்மை இனத்தை பல்வேறு வழிகளிலும் தந்திரமாக பயன்படுத்தி சிங்கள அரசாங்கங்களும் படையணி இயந்திரமும் கடந்த காலங்களில் எமது இரு சமூகங்களையும் மோதவிட்டு வெற்றிகரமாக இவை செயற்பட்டுள்ளன.

விடுதலை வேண்டி போராடிய தமிழ் மக்களை இனஅழிப்பு யுத்தத்தின் மூலம் பலவீனப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது எமது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருக்கின்றது.

எவ்வாறு ஆரம்பகாலங்களில் தமிழ் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இலக்கு வைக்கப்பட்டனவோ அதேபோல, இன்று முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இன வன்முறை என்ற போர்வையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்தகால அரசாங்கங்களின் அனுசரணையுடன் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத சக்திகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டன என்பதை அரசாங்க அமைச்சர்களே வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இந்த உள்நாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளுடன் ஏற்பட்டுள்ள தொடர்புகளை முடிந்தளவுக்கு பயன்படுத்தி ஏனைய சமூகங்களை அடக்கி ஆள்வதற்கும் சர்வதேச அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கும் முயலும் பேரினவாதத்தின் திட்டங்களுக்கு நாம் மீண்டும் பலியாகிவிடக்கூடாது.



தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களின் உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகத்தின் உதவிகளுடன் நசுக்கியதைபோல தற்போது முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை மழுங்கடிக்கும் கைங்கரியங்கள் நடந்தேறுவதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சமயோசிதமாகக் காய்களை நகர்த்தவேண்டும்.

எமது சிங்கள புத்திஜீவிகள் மற்றும் நியாயமான சிங்கள அரசியல்வாதிகள் பேரினவாத நகர்வுகள் இராணுவ ஆட்சியொன்றை இலங்கையில் ஏற்படுத்தாது பார்த்துக் கொள்ளவேண்டும்.


சிங்கள பௌத்த பேரினவாதம் இராணுவம் மூலமாக சிறுபான்மையினரை இருந்த இடம் தெரியாமல் ஆக்கமுற்பட்டால் அதனை முறியடிக்க நாம் யாவரும் தயாராகவேண்டும்.