ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்தே முஸ்லிம்கள் மீது தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 14, 2019

ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்தே முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னால் ஆட்சி மாற்றத்தை விரும்பும் அரசியல் பின்னணி உள்ளதாக பிரதமர் தலைமையிலான குளியாப்பிட்டிய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், அசம்பாவிதத்தின் பின்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சென்று விடுவித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி நகருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலி சாஹிர் மௌலானா மற்றும் ஜெ.சி. அலவத்துவல ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.கொட்டம்பாபிடிய பிரதேசத்துக்கு விஜயம்செய்த பிரதமர், அங்கு தாக்குதலுக்கு இலக்கான மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு சென்று அழிவுகளை நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் குளியாப்பிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட சிலரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளையும், மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் சந்தித்து தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.


இந்த கலந்துரையாடலின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனையவர்கள் முன்வைத்த கருத்துகளை செவிமடுத்த பிரதமர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் கலவரங்கள் ஏற்படலாமென்ற அச்சம் நிலவுவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அங்கு சமூகமளித்திருந்த பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதாகவும் பிரதமர் அங்கு உறுதியளித்தார்.


இத்தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொண்ட தருணத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடாத்தியதாக பிரதமரினதும் அமைச்சர்களினதும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு இந்த விடயத்தை அங்கு சமூகமளித்திருந்த பௌத்த மதகுருமார்களும் உறுதிப்படுத்தினார்கள்.

மேற்படி அசம்பாவிதத்தின் பின்னணியில் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்ட ஆறு பேரை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வந்து விடுவித்துச் சென்றதாகவும் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


அதேவேளை, இந்த தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்னணியொன்றும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை காரணமாக வைத்து, ஆட்சி மாற்றமொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த குண்டர்கள் இவ்வாறான தாக்குதல்களை தொடுத்திருந்ததாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.


இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாகனங்களில் வந்தவர்களின் பதிவுகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை சி.சி.ரிவி. கமெராக்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகள் மூலம் இனங்கண்டு அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், சூத்திரதாரிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அங்கிருந்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட ஹெட்டிபொல, கொட்டம்பாபிடிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற இடங்களில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்குச் சென்று, மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.