கொழும்பின் பிரதான நகரங்களில் அடுத்தவாரம் தாக்குதல் நடத்த திட்டம் – எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 9, 2019

கொழும்பின் பிரதான நகரங்களில் அடுத்தவாரம் தாக்குதல் நடத்த திட்டம் – எச்சரிக்கை



எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பிரதான நகரங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும்.

உளவுத்துறை பலவீனமடைந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வந்ததனர். உளவுத்துறையில் சிலர் நீக்கப்படுவதன் மூலம் உளவுத்துறை பலவீனமடையவில்லை. மாறாக உளவுத்துறையை தொழிநுட்ப ரீதியில் பலப்படுத்தவில்லை.

மேலும் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பதவி விலகியமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் பாதுகாப்பு செயலாளர் எனக்கு நன்கு தெரிந்தவர். பாதுகாப்பு செயலாளர் என்றவகையில் தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்ததை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமல் இருப்பேனா என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

அதேபோன்று தாக்குதல் எச்சரிக்கை இருப்பது தொடர்பாக பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் 15 தடவைக்கும் மேல் ஜனாதிபதிக்கு தெரிவித்ததாகவும் அப்போதெல்லாம் ஜனாதிபதி கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே நான் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

அந்த சட்டத்தில் குறைகள் இருக்கின்றமையாலே அந்த சட்டத்துக்கு கீழ் என்னை கைதுசெய்து சிறையில் அடைக்க முடியுமாகியது.

அதனால் தற்போதுள்ள நிலையில் அரசியல் லாபம் நோக்கில் செயற்படாமல் நாடு தொடர்பாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே இந்த பிரச்சினையில் இருந்து மீள முடியும்.

இந்நிலையில், வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் எதிர்வரும் 13ஆம் திகதி குண்டு வெடிக்கும் அச்சம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக.” என கூறினார்.