குண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 9, 2019

குண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு!இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க பொது ஆலோசனை அலுவலகத்தின் வணிக சட்ட மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் சர்வதேச திட்ட நிபுணர் செல்ஸா டெகமினாடாவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு ஷங்ரி லா நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் செல்ஸா கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்ததாக அமெரிக்க பொதுத்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

செல்ஸாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் அதேவேளை, இலங்கை உள்ளிட்ட உலகின் சகல நாடுகளும் கைகோர்த்து பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் இணைந்து போராட வேண்டும் என்ற செய்தியை, அமெரிக்க பொதுத்துறை அமைச்சர் வில்பர் ரோஸும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் சுமார் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, சுமார் 500 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.