வர்த்தக விசாவில் இந்தியாவுக்கு வந்து சென்ற இலங்கை பயங்கரவாதிகள் – புலனாய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 9, 2019

வர்த்தக விசாவில் இந்தியாவுக்கு வந்து சென்ற இலங்கை பயங்கரவாதிகள் – புலனாய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்



இலங்கையில் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு பெங்களூர் கொச்சி சென்னை மும்பை டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ளமையை இந்திய புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சில தற்கொலைக் குண்டு தாரிகள் பயிற்சிக்காக காஷ்மீர், கேரளா மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு பயணித்தனர் என சில நாட்களுக்கு முன்னர் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு வர்த்தக விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளமையை உறுதி செய்துள்ளன இந்திய புலனாய்வாளர்கள் அவர்கள் எந்தவித பயிற்சியும் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய புலனாய்வு துறை மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் வெளிநாட்டினர் உள்பட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய இல்காம் அகமது மொஹமட் இப்ராஹிம், அவரது மூத்த சகோதரர் இன்சாப் அஹமட் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் 2 பேரும், இந்தியாவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2012ஆம் ஆண்டில் வர்த்தக விசாவில் வந்து சென்றுள்ளனர்.பெங்களூர், கொச்சி, சென்னை, மும்பை, டில்லி ஆகிய நகரங்களுக்கு அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

ஆனால் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்தது போல, இருவரும் காஷ்மீருக்கு வரவோ அல்லது பயங்கரவாத பயிற்சி பெறவோ இல்லை. இவர்கள் 2 பேரின் தந்தை, இலங்கையில் மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். கொழும்பை தலைமையிடமாகக் கொண்டு அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, அவரை இலங்கை பொலிஸார் கைது செய்துவிட்டனர். அவரது நிறுவனம், இந்தியாவின் நம்பகமான வர்த்தக நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. கேரளா முதல் டில்லி வரையிலும் அவரது நிறுவனத்துக்கு வர்த்தக தொடர்பு உள்ளது.

குண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகள், இந்தியா வந்து சென்றதாக இலங்கை தெரிவித்துள்ள நிலையில், அவர்களிடம் மேலும் இது குறித்து தகவல் இருக்கலாம் எனத் தெரிகிறது.

அந்தத் தகவல், தெற்காசிய பிராந்திய பாதுகாப்புக்கு உதவியாக இருக்கலாம் எனவும் இதனால் அந்த 2 பேரும், இந்தியாவுக்கு வந்து சென்றது, எதற்காக வந்தனர் என்பது தொடர்பான விவரங்கள் இலங்கையிடம் கோரப்பட்டுள்ளது.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.