ஈஸ்டர் நாளன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்திய ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையான விபரங்களையும் சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது.
சஹ்ரான் காசிம் அல்லது சஹ்ரான் ஹஸ்மி தலைமையிலேயே குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவரது குடும்பத்தினரும் தாக்குதல்களிலும், தாக்குதல்களை ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஷங்ரி-லா விடுதியில் சஹ்ரான் காசிம் குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார். சஹ்ரானின் மனைவியும் மகளும், சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாய்ந்தமருது மறைவிடத்தில் குண்டைவெடிக்கச் செய்து உயிரிழந்தவர்களில், சஹ்ரானின் தந்தை மற்றும் ரில்வான், செய்னி ஆகிய இரண்டு சகோதரர்களும் அடங்கியுள்ளனர்.
சஹ்ரானின் சாரதியான, ஆதாம் லெப்பை கபூர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், சாய்ந்தமருது மறைவிடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரான செய்னியின் மனைவியின் தந்தை ஆவார்.
ஷங்ரி- லா விடுதியில் சஹ்ரானுடன் இணைந்து மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடவைச் சேர்ந்த இல்ஹாம் அகமட்டும் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தார். இவரது தந்தையான மொகமட் யூசுப் மொகமட் இப்ராஹிம் மற்றும் இரு சகோதரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினமன் கிரான்ட் விடுதியில் மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடவைச் சேர்ந்த இன்சாப் அகமட் தாக்குதல் நடத்தியுள்ளார். அவர், ஷங்ரி- லா விடுதி குண்டுதாரிகளில் ஒருவரான இல்ஹாமின் சகோதரராவார். இவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிங்ஸ்பெரி விடுதியில், கொழும்பு 12 ஐ சேர்ந்த, மொகமட் அஸ்ஸாம் முபாரக் மொகமட் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். இவரது மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில், கொழும்பு, மட்டக்குளியை சேர்ந்த, அகமட் முவாஸ் என்ற தற்கொலைக் குண்டுதாரி தாக்குதலை நடத்தினார். அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயத்தில், வாழைச்சேனையைச் சேர்ந்த, மொகமட் ஹஸ்துன் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். அவரது மனைவியான புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாராவும், சாய்ந்தமருது மறைவிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த மொகமட் நாசர் மொகமட் அசாட் என்ற தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார்.
தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டைவெடிக்க செய்ய முயன்று தோல்வி கண்ட- வெல்லம்பிட்டி, கம்பளை ஆகிய முகவரிகளைக் கொண்ட அப்துல் லதீப் ஜமீல் முகமட் என்ற தற்கொலைக் குண்டுதாரி, தெகிவளையில் உள்ள ரொப்பிக்கல் இன் என்ற சிறிய தங்கு விடுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மரணமானார்.
இவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷங்ரி-லா குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இல்ஹாம் அகமட்டின், மனைவியான பாத்திமா இல்ஹாம், தெமட்டகொடவில் உள்ள அவரது வீட்டில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தார் என்றும், இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.