இலங்கை குண்டுவெடிப்பு முக்கிய சூத்திரதாரியான ஜஹ்ரான் ஹாஷிம் 15 வயது சிறுமியை மணந்துகொண்ட சம்பவம் தொடர்பில் அவரது உறவினரே வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் நாளில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குறித்த தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான ஜஹ்ரான் ஹாஷிமின் மாமனார் அளித்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெறுகிறது.
முகம்மது ஹுசைன் அப்துல் காதர் என்பவரின் மகளையே ஜஹ்ரான் ஹாஷிம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அப்துல் காதரின் குடியிருப்புக்கு தமது உறவினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார் ஹாஷிம். ஒருகட்டத்தில் அப்துல் காதரை தனியாக சந்தித்து பேசிய ஹாஷிம்,
தாம் ஒரு மசூதியில் கல்வி பயின்று வருவதாகவும், அவரது மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹாஷிம் குறித்த கோரிக்கையை முன்வைக்கும்போது அப்துல் காதரின் மகளான பாத்திமா ஸாதியாவுக்கு 15 வயது என கூறப்படுகிறது.
ஹாஷிமின் குடும்பம் தொடர்பில் தமக்கு முன்னரே தெரியும் என்பதால் தமது மகளை அவர் திருமணம் செய்வதில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என அப்துல் காதர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 28 ஆம் திகதி, சாய்ந்தமருதுவில் உள்ள ஹாஷிமின் குடியிருப்புக்குள் புகுந்த பொலிசாரிடம் சிக்காமல் இருக்க,
அவரது தந்தையும் இரு சகோதரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், பொலிசாரின் தாக்குதலிலே அவர்கள் கொல்லப்பட்டனர் என இருவேறு கருத்துக்கள் வெளியாகின.
இந்த நிலையில் அப்துல் காதரின் துணையுடனே, பாத்திமாவையும் அவரது மகளையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இருவரும் காயங்களுடன் பொலிசாரால் மீட்கப்பட்டனர். இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் சிறார்கள் உட்பட 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500-கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.