சுவிஸில் உணவகத்தில் புகுந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்: பின்னர் நடந்த சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 1, 2019

சுவிஸில் உணவகத்தில் புகுந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்: பின்னர் நடந்த சம்பவம்



சுவிட்சர்லாந்தில் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்திய நபருக்கு 7 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு 40 வயது மதிக்கத்தக்க நபரால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் Café Féderal உணவகத்தில் புகுந்த அந்த நபர் திடீரென்று துப்பாக்கி ஒன்றை காண்பித்து பொதுமக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார்.

பின்னர் தாம் எடுத்துவந்த பையை தரையில் வைத்துவிட்டு, இதனுள் வெடிகுண்டு இருப்பதாகவும், 30 நொடிகளில் அது வெடித்துவிடும் எனவும் கூறிக்கொண்டே அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

சுவிஸ் தேசிய நாள் கொண்டாட்டத்தில் முழுகியிருந்த மக்களுக்கு அந்த நபரின் செயல் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மட்டுமின்றி அடுத்த 30 நொடிகளில் வெடிகுண்டு வெடித்துவிடும் என்ற அச்சுறுத்தல் அவர்களை உயிர் பயத்தில் அங்கிருந்து வெளியேற வைத்துள்ளது.



இதனிடையே சுதாரித்துக்கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் உயிரை பணயம் வைத்து, அந்த வெடிகுண்டு பையை உடனடியாக உணவகத்தில் இருந்து வெளியே எடுத்துச்சென்றுள்ளார்.

ஆனால் அனைவரும் எண்ணியதுபோன்று அந்த பை வெடிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதில் மடிக்கணனி ஒன்று மட்டும் இருந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அந்த நபரை அதே நாள் St. Gallen பகுதியில் வைத்து கைது செய்தனர்.

மட்டுமின்றி, வெடிகுண்டு சோதனை என்பதால் அப்பகுதி முழுவதும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சிறப்பு குழுவினரால் தீவிர சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

தற்போது அந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குறித்த 40 வயது நபருக்கு 7 மாத சிறை தண்டனையும் 800 பிராங்குகள் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.