மனித உடல் உறுப்பு சட்டவிரோத வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்ட குழு ஒன்று இந்தியாவின் - தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராச்சகொண்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழுவை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர் ஒருவரின் சிறுநீரகத்தொகுதி களவாடப்பட்டு அவர் பணமோசடிக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு பணமோசடிக்கு உள்ளாகியவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைவாக புதுடெல்லியின் குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீண்டகாலமாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை ஏமாற்றி அவர்களது முக்கிய அவயங்களை அபகரித்து பணம் பெற்றுக் கொள்ளும் தொழிலையே குறித்த குழு மேற்கொண்டு வந்துள்ளது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கை, எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளை மையப்படுத்தி இந்தியாவில் செயற்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைவாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் சம்மந்தமான தகவல்களை பெற்றுகொள்ள விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.